புதுவை கவர்னர் கிரண்பேடி அவரது வரம்பிற்குள் செயல்பட வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஏப்ரல் 16ஆம் தேதி நேற்று சென்று சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
தமிழக விவசாயிகள் வங்கி கடன் பிரச்னைக்காக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக டெல்லியில் போராடி வருகிறார்கள். அவர்களது கோரிக்கை நியாயமானது. வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளை பிரதமர் மோடி அழைத்து பேச வேண்டும். புதுச்சேரியில் கூட்டுறவு கடன்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம். உத்தரப்பிரதேச அரசு சமீபத்தில் விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்துள்ளது.
விவசாய கடன்களை ரத்து செய்ய மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். விவசாய கடன்களை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார். ஆனால் மத்திய அரசு இதற்கு நிதி வழங்காது என அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஆட்சியில் இருந்தபோது அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் ரூ.70 ஆயிரம் கோடி விவசாய கடன்களை ரத்து செய்தார். அந்த வழியை மோடியும் பின்பற்ற வேண்டும்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான பொதுமக்களின் போராட்டம் நியாயமானது. எரிவாயு திட்டத்தை காரைக்காலில் தனியார் பங்களிப்புடன் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டபோது, நான் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் வேண்டாம் என வலியுறுத்தினேன். இதனால் அந்த திட்டம் நாகப்பட்டினத்துக்கு மாற்றப்பட்டது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் நலன் பாதிக்கப்படும் என்ற புதுவை முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியுடனான மோதல் போக்கு குறித்து பேசுகையில் , மத்திய-மாநில அரசுகளில் நீதித்துறை, சட்டம், நிர்வாகம் ஆகியவற்றை பொறுத்தவரை அதிகாரிகள் உரிய வரம்பிற்குட்பட்டு செயல்படவேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அவரவர் வரம்பிற்குள் செயல்பட்டால் நல்லது என்று அவர் கூறினார்.�,