ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு உடனடியாக அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என பிரதமருக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து, அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை அறிவிக்காத இந்த நேரத்தில், தமிழகத்தில் மாணவர்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுவையிலும் மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பு அளிக்க வேண்டும்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைபெற்று வந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கூடாது என்று தமிழக அரசின் சார்பில் குறிப்பாக திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் ஆட்சிகளிலும் பலமுறை கோரிக்கை வைத்தும் உச்சநீதிமன்றம் அனுமதியளிக்காதது வருத்தம் அளிக்கிறது. ஜல்லிக்கட்டால் காளைகளுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது. உச்சநீதிமன்றம் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் சிலம்பாட்டம், குத்துச் சண்டை போன்ற பல வீர விளையாட்டுகள் தொன்றுதொட்டு பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகின்றன.
ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதியளிக்காதபட்சத்தில் அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைக்கு மோடி அரசு செவி சாய்க்காமல் இருப்பது வேதனையளிக்கிறது. தற்போது, இந்தப் பிரச்னையில் மாணவர்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த புதுவை அரசு முழுமையான ஆதரவளிக்கிறது. புதுவை மாநில முதலமைச்சர் என்ற முறையில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
மாணவர்கள் தங்கள் போராட்டத்தை அறப் போராட்டமாக நடத்த வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது. போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது. அப்போதுதான் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும்.
பிரதமர் மோடி அவசரச் சட்டத்தை கொண்டு வந்து தமிழகம் மற்றும் புதுவையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.�,