அறியாமையும் பேராசையுமே குற்றங்கள் நடைபெறக் காரணம் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து விழிப்புணர்வு, வங்கி மோசடி, சைபர் க்ரைம் தொடர்பான 3 குறும்படங்கள் இன்று (மார்ச் 9) தமிழகக் காவல் துறையால் வெளியிடப்பட்டன. சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இவற்றை வெளியிட்டார். இதையடுத்துப் பேசியவர், ஒரு குறும்படத்தில் சிறுவன் தனது தந்தை போக்குவரத்து விதியை மீறும்போது அவரை எச்சரிப்பது போன்று ஒரு காட்சி அமைந்துள்ளதைப் பாராட்டினார். சாலை விதிகளை மதிப்பதே மக்கள் கலாச்சாரமாக மாறினால் போக்குவரத்து விதிமீறல்களை முற்றிலுமாகத் தடுக்க முடியும் என்றார்.
கடந்த ஆண்டில் மட்டும் சென்னையில் சாலை விபத்துகளில் 1,297 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 792 பேர் இருசக்கர வாகன ஒட்டிகள் என்றும், அவர்களில் 23 பேர் மட்டுமே தலைக்கவசம் அணிந்தவர்கள் என்றும் காவல் துறை ஏற்கனவே வெளியிட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 97 சதவிகிதம் பேர் தலைக்கவசம் அணியாமல் உயிரிழந்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தன் பேச்சில் குறிப்பிட்டார் விஸ்வநாதன்.
கடந்த ஆண்டில் ஆன்லைன் வங்கி மோசடி மற்றும் சைபர் குற்றங்கள் தொடர்பாக, சென்னையில் 8 ஆயிரத்து 272 குற்றங்கள் நடந்துள்ளன. ஆன்லைன் மூலம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக 514 புகார்கள் வந்ததாகத் தெரிவித்தார் விஸ்வநாதன். அறியாமையும் பேராசையுமே குற்றங்கள் நடைபெறக் காரணம் என்றும், இது போன்ற மோசடிச் செயல்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
�,