[அறிக்கை விட்டது துரைமுருகன் தானா?

public

திமுகவுக்கும் பாமகவுக்கும் அறிக்கை யுத்தம் முற்றி வருகிறது. கடலூர் முதல் நாகை வரையிலான 44 கிராமங்களை பெட்ரோலிய மண்டலம் ஆக மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்துக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஏன் கண்டனம் தெரிவிக்க வில்லை என்று பாமக தரப்பில் அறிக்கைவிடப்பட்டது. இதைக் கண்டித்து திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், ‘டாக்டர் ராமதாஸ் அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக மாறியது ஏன்?” என்று கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்து பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி எம்.பி. இன்று ஆகஸ்டு 2 ஆம் தேதி மீண்டும் அறிக்கை விட்டிருக்கிறார்.

அதில்,

’’நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் பெட்ரோக் கெமிக்கல்ஸ் மண்டலம் அமைப்பதைக் கண்டித்து மக்களுடன் இறங்கி போராடாமல் திமுக அமைதி காப்பது ஏன்? என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வெளியிட்ட அறிக்கைக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்காமல் முதன்மை செயலாளர் துரைமுருகன் பெயரில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆனாலும், மருத்துவர் அய்யா அவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு அந்த அறிக்கையில் பதிலளிக்கப்படவில்லை என்பதே உண்மை

எது எப்படியிருந்தாலும் அண்ணன் துரைமுருகன் பெயரில் நீ…ண்ண்ண்ட நாட்களுக்குப் பிறகு அறிக்கை வந்திருப்பதில் மகிழ்ச்சி. பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான அறிக்கை என்றால் அது துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் பெயரில் தான் வெளிவரும். இதன் பின்னணியில் திமுக நடத்தும் ஜாதி அரசியலை தமிழக மக்கள் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

அண்ணன் துரைமுருகன் பெயரில் அறிக்கை வெளிவந்திருந்தாலும் கூட, இதை அவர் எழுதியிருக்க மாட்டார். இப்படி ஒரு அறிக்கை அவர் பெயரில் வந்தது அவருக்கே தெரியுமா? என்பது தெரியவில்லை. ஏனெனில், அண்ணன் துரைமுருகன் எழுதியிருந்தால் அது லாஜிக்காக இருந்திருக்கும். இப்படித் தப்பும் தவறுமாக இருந்திருக்காது. அறிக்கையின் இரண்டாவது பத்தியின் முதல் சில வரிகளில் பெட்ரோலிய மண்டலத்திற்கு திமுக ஆட்சியில் தான் அனுமதி கொடுக்கப்பட்டதாக மருத்துவர் அய்யா கூறுவதில் உண்மையில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. அடுத்த சில வரிகளில் தமிழகத்திற்கு முதலீடு வர வேண்டும் என்பதற்காகத் தான் இத்திட்டத்திற்கு ஆய்வு நடத்த கலைஞர் அனுமதி கொடுத்தார் என்று கூறப்பட்டிருக்கிறது. இதில் எது உண்மை என்பதை செயல்தலைவரிடம் கேட்க வேண்டுமா… அண்ணன் துரைமுருகனிடம் கேட்க வேண்டுமா? என்பது தெரியவில்லை. எது எப்படியாகினும் அதற்கு பிந்தைய வரிகளில் இத்திட்டத்திற்கு திமுக தான் ஆய்வு அனுமதி அளித்தது என்பதை ஒப்புக் கொண்டதற்கு நன்றி. இந்த பாவத்தையும், துரோகத்தையும் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள்.

அதிமுக செய்தித் தொடர்பாளராக பா.ம.க. செயல்படுகிறது என்று கூறியிருப்பதன் மூலம் அண்ணன் துரைமுருகன் அவரது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

இப்போதும் கூட பெட்ரோலிய மண்டலத்தை எதிர்ப்பது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடாமல், அப்படி வெளியிட்டதாக அருமை நண்பர் ஸ்டாலின் கூறிய பொய்க்கு தான் துரைமுருகன் வக்காலத்து வாங்குகிறார். பெட்ரோலிய மண்டலத்தை எதிர்த்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தால் அதை துரைமுருகன் ஊடகங்களுக்கு வழங்கி நிரூபிக்கலாமே? அதற்கு அண்ணன் துரைமுருகன் தயாரா? மருத்துவர் அய்யா அவர்களையும், என்னையும் இவ்வளவு மோசமாக பிராண்டியதற்கு கைமாறாக அண்ணன் துரைமுருகனுக்கு அருமை நண்பர் ஸ்டாலினிடம் இருக்கும் இரு பதவிகளில் ஒன்றான திமுகவின் பொருளாளர் பதவி வழங்கப்படுமானால் அதை நினைத்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்’’ என்று கூறியிருக்கிறார் அன்புமணி.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *