[அராத்து எழுதும் உயிர் + மெய் தொடர்!

Published On:

| By Balaji

உயிர்+மெய் (Day-47)

இன்றைய இரவு ஷமித்ரா மற்றும் சந்தன் இருவருக்குமே கொடூரமானதாக இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் மிஸ் செய்தார்கள். நித்திகா தொடர்ந்து சந்தனுக்கு மெஸேஜ் அனுப்பி எரிச்சல் மூட்டிக்கொண்டு இருந்தாள். சந்தனுக்கு உடனே ஓடிச்சென்று ஷமித்ராவை அணைத்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது. அதன் மூலம் மட்டுமே நித்திகாவுடனான கெட்ட கனவில் இருந்து அவனால் வெளி வர முடியும்.

ஷமித்ராவை சந்தவி தொல்லை செய்து கொண்டே இருந்தாள். ’ஏன் நேத்து நைட்டு வரலை?’-இந்த ஒரு கேள்வியையே வெவ்வேறு விதமாக கேட்டுக்கொண்டு இருந்தாள். முந்தைய நாள் அனுபவம் ஷமித்ராவுக்குள் ஒரு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ’நான் ஏன் ஒரு ஸ்ட்ரேஞ்சருடன் சென்றேன்? எது என்னை மயக்கியது ? அல்லது இயக்கியது? நானும் ஒரு லக்ஸூரி கார் , க்ளப் என்றவுடன் வாயடைத்துப் போய்விட்டேனா?

அவனை ஏன் நான் முத்தமிட்டேன்? அவன் அணுகுமுறை அப்படி செய்ய வைத்ததா? சந்தனின் மேலிருந்த கோபமா? அவன் மரியாதையாக நடந்து கொண்டதாலா ? அவன் பர்ஸ்னாலிட்டியா ? போதையா? புகழ்ச்சியா? ஏன் அவனுடன் அவ்வளவு தூரம் சென்றேன்? என மனதுக்குள் புழுங்கிக்கொண்டே இருந்தாள்.

இருவரும் நள்ளிரவுக்கு மேல் கண் அயர்ந்தனர்.

மறுநாள் காலை பதினோரு மணிக்கு சந்தனின் ஃப்ளாட் காலிங்க் பெல்லை அடித்தாள் ஷமித்ரா. டிரிம் செய்து கொண்டு , குளித்து முடித்து ஃப்ரெஷாக இருந்த சந்தன் கதவைத் திறந்தான்.

உள்ளே வந்த ஷமித்ரா உடனடியாக தன்னுடைய பொருட்களை எடுத்து ஒரு இடமாக அடுக்க ஆரம்பித்தாள்.

’’எதாவது குடிக்கிறியா ஷமி?’’ என்றான் சந்தன்.

’’இல்ல வேணாம், தேங்க்ஸ்’’ என்ற ஷமி, ’’காலி பாக்ஸ், இல்லன்னா பெரிய பை இருந்தா கொடேன் , சின்ன சின்ன பொருட்களை அதுல போட்டுக்குவேன்’’ என்றாள்.

’’நீயே எடுத்துட்டு போகப்போறியா ஷமி?’’ என்றான் சந்தன்.

’’இல்ல, பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் சொல்லி இருக்கேன். மதியம் 1 மணிக்கு வந்துடுவாங்க . நான் ஜஸ்ட் அரேஞ்ச் பண்ணி வச்சிட்டா ஈஸியா இருக்கும் அதான்’’

’’எங்க போற ஷமி?’’

’’ஹாஸ்டலுக்குத்தான்’’

’’இவ்ளோ திங்க்ஸையும் வைக்க இடம் இருக்கா அங்க?’’

’’ஒரு ஸ்டோர் ரூம் இருக்கு, அதுல தேவையில்லாததை போட்டுடுவேன். தேவையானதை மட்டும் ரூம்ல வச்சிப்பேன். அதெல்லாம் பேசிட்டேன்’’

’’கண்டிப்பா போய்த்தான் ஆகணுமா ஷமி ?

வேலையை நிறுத்தி விட்டு, சில செகண்ட்ஸ் அமைதியாக இருந்தாள். ’’நீதான் போகச் சொன்ன . … அப்ப போயிடறதுதானே நல்லது’’

’’நான் போகச் சொன்னேன்னு போறேன்னு சொல்றியே, அப்ப நான் இருக்க சொன்னா இருக்கனும்தானே, அதான லாஜிக்? இங்கேயே இருந்துடு ஷமி ப்ளீஸ்’’

ஒருக்கணம் திகைத்த ஷமித்ரா, ’’நீ போகச் சொன்னா போறதுக்கும், இருக்க சொன்னா இருக்கறதுக்கும் நான் என்ன அடிமையா சந்தன்?’’

’’அதேதான் நானும் சொல்றேன். நான் சொல்றதை கேக்காதே. நான் உன்னை போன்னு கோவத்துல சொன்னதை ஏன் நீ கேக்கற? நான் சொன்னதை கேட்டு வெளில போகாதே . தோ பாரு ஷமி , சத்தியமா சொல்றேன், கோவத்துல என்ன சொல்றதுன்னே புரியாம எதோ ஒளறிட்டேன். அதுவும் உன் மேல இருக்கும் பொஸசிவ்னஸ்தான்’’

’’இந்த பொஸசிவ்னஸ்ஸே சுத்த ஏமாத்து வேலை. பொஸசிவ்னஸ்ஸை வச்சி பொண்ணுக்கு எதாவது கேரிங்கா செய்யறீங்களா? சந்தேகப்படறதையும் , திட்டுறதையும் பொஸசிவ்னஸ்ஸுன்னு சொல்லி சமாளிக்கிறீங்க’’ என்றாள்.

சந்தன் காயப்பட்டான் .

(நாளை காலை 7 மணிக்குச் சந்திப்போம்)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel