அரசு மருத்துவர்களின் வருகைப்பதிவையும், அவர்களின் செயல்பாட்டையும் மேற்பார்வையிடக் கண்காணிப்புக் குழுவொன்று அமைக்க தமிழக சுகாதாரத் துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அரசு பொது மருத்துவமனையில் உணர்வகற்றியல் பிரிவில் சிலம்பன் என்பவர் பணியாற்றி வந்தார். தனது பெற்றோர்களுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவர்களைக் கவனிக்க வேண்டியிருப்பதாகக் கூறி, மருத்துவமனை டீனுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினார் சிலம்பன்.
இந்த நிலையில், சிலம்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். “என்னுடைய ராஜினாமா கடிதம் மீது முடிவு அறிவிக்காத மருத்துவமனை டீன், அனுமதியில்லாமல் விடுமுறை எடுத்தது குறித்து விளக்கமளிக்கும்படி தனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். என்னுடைய ராஜினாமா கடிதத்தை ஏற்று பணியிலிருந்து விடுவிக்க உத்தரவிட வேண்டும்” என்று தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று(மார்ச் 13) விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், மனுதாரரின் ராஜினாமா கடிதத்தை டீன் பெற்றதற்கு எந்த ஆதாரங்களும் தாக்கல் செய்யாததால், அந்தக் கடிதத்தை நம்ப முடியாது எனக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், பொதுமக்களின் வரிப்பணத்தில் அரசுக் கல்லூரிகளில் சிறப்பு நிபுணத்துவ அனுபவத்தைப் பெறும் மருத்துவர்கள் பொது மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும். ஆனால், பல மருத்துவர்கள், அரசு செலவில் நிபுணத்துவ அனுபவத்தைப் பெற்று தனியாக பிராக்டீஸ் செய்வதுடன், வெளிநாடுகளுக்கும் சென்றுவிடுகின்றனர் என நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்கள் ஏழை மக்களுக்கு முறையாக சிகிச்சை வழங்காமல் அனுமதியின்றி விடுப்பில் சென்று விடுகின்றனர் எனத் தெரிவித்த நீதிபதி, அரசு மருத்துவர்களின் வருகைப் பதிவையும், அவர்களின் செயல்பாட்டையும் மேற்பார்வையிடக் கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என தமிழகச் சுகாதாரத் துறை செயலாளருக்கு உத்தரவிட்டார்.
அரசு செலவில் அனுபவங்களைப் பெற்று, விதிகளை மீறி செயல்படும் மருத்துவர்களிடம் இருந்து இழப்பீட்டு தொகையை வசூலிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.�,