மருத்துவக் காப்பீடு அட்டை இல்லாததால் சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவமனையில் 8 வயதுச் சிறுமிக்குக் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யாமல் திருப்பி அனுப்பிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், கட்டிகுளத்தைச் சேர்ந்த கருப்புசாமியின் மகள் விவிகாஸ்ரீ (வயது 8). பள்ளியில் நடத்தப்பட்ட மருத்துவ முகாமின்போது, விவிகாஸ்ரீக்குக் குடலிறக்க நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, கடந்த 28ஆம் தேதியன்று சிறுமியை சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, அவரது பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர்.
சிறுமியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், 9ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யலாம் என்று கூறியிருந்தனர். ஆனால் மருத்துவர்கள் கூறியபடி 9ஆம் தேதி சிறுமி விவிகாஸ்ரீக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை.
மருத்துவக் காப்பீடு அட்டை இல்லாததால், சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யமுடியாது என மருத்துவர்கள் கூறியதாகவும், தன்னைத் தரக்குறைவாக மருத்துவர்கள் பேசியதாகவும் சிறுமியின் தந்தை கருப்புசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அறுவை சிகிச்சைக்குக் காப்பீடு அட்டை இருந்தால் நல்லது என்றும், அந்த அட்டை கட்டாயம் இல்லை என்றும் கூறியதாக இது தொடர்பாக மருத்துவமனை வட்டாரங்களில் தெரிவித்தனர்.�,