அரசியல் ஆதாயத்திற்காக குறை கூறுகிறார்கள் : ஸ்டாலின்

public

விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்பு போராட்டம் நடத்தியதை சில அரசியல் கட்சிகள் குறை சொல்வது அரசியல் நோக்கம் உடையது என்று கூறியிருக்கிறார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- விவசாயிகளின் நலன் காக்கவும் தமிழக மக்களின் அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்க்கவும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி திமுக மற்றும் அனைத்துக் கட்சிகள் இணைந்து நடத்திய முழு அடைப்புப் போராட்டம் மக்களின் பேராதரவுடன் பெருவெற்றி பெற்றிருக்கின்ற நிலையில், ‘காய்த்த மரம் கல்லடிபடும்’ என்பது போல, இந்தப் போராட்டம் எந்த அரசுகளுக்கு எதிராக நடத்தப்பட்டதோ அந்த அரசுகளையும் ஆளுங்கட்சிகளையும் சேர்ந்தவர்களும், இந்தப் போராட்டத்தில் அரசியல் காரணங்களுக்காக பங்கேற்காத சில கட்சிகளின் தலைவர்களும் திமு கழகத்தின் மீது வசை மாரி பொழியத் தொடங்கி இருக்கிறார்கள்.

இதுவே முழு அடைப்புப் போராட்ட வெற்றியின் விளைவுதான் என்ற போதும், விவசாயிகளின் நலனுக்காகப் போராட திமுக-வுக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும், விவசாயிகளுக்கு தி.மு.க துரோகம் இழைத்துவிட்டது என்றும் அவதூறு பரப்புவதையே அன்றாட அரசியல் நடவடிக்கையாக சிலர் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, காவிரி பிரச்சனையில் திமுக மீது பழிபோடுவது என்பது இங்கே நெடுங்கால அரசியல் உத்தியாகக் கையாளப்பட்டு வருகிறது.

முழு அடைப்புப் போராட்டத்தின் வெற்றிக்குப் பிறகும் அதிமுக, பாஜக, பாமக, மற்றும் இன்னும் சில கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், நிர்வாகிகளும் இதே குற்றச்சாட்டைக் கூறி வருகிறார்கள். அவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களின் அவதூறுகளை அப்படியே பரப்புவோருக்கும் விளக்கம் அளிக்கும் வகையில், காவிரி விவகாரம் குறித்து தலைவர் கலைஞர் 26.10.2016 அன்று விரிவாக வெளியிட்ட அறிக்கையின் சில பகுதிகளை சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்.

காவிரிப் பிரச்னையாக இருந்தாலும், மீத்தேன் ஆய்வுக்கு மட்டுமான புரிந்துணர்வு ஒப்பந்தமாக இருந்தாலும் அது குறித்து புரிந்தும் புரியாதபடி தி.மு.க மீது குற்றம்சாட்டுவது சில கட்சிகளுக்கு அன்றுதொட்டு இன்று வரை வழக்கமாக இருக்கிறது.எத்தனை விளக்கங்கள் கொடுத்தாலும் மீண்டும் மீண்டும் அவதூறு சுமத்தி அரசியல் ஆதாயம் தேட நினைக்கின்ற கட்சிகள் பற்றிக் கவலைப்படவேண்டாம். தூங்குவோரை எழுப்ப முடியும், தூங்குவது போல நடிப்போரை எழுப்ப முடியாது.

விவசாயத் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு, குடிமனைப்பட்டா, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், கூட்டுறவுக் கடன்கள் ரத்து, உழவர் சந்தை, ஆறுகளைத் தூர்வாருதல், தமிழக நதிநீர் இணைப்பு, நெல் கரும்பு உள்ளிட்டவற்றுக்கான நியாயமான ஆதார விலை உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றியதும் முன்னெடுத்ததும் திமுக அரசுதான் என்பதை விவசாயிகள் அறிவார்கள். அவர்களின் நலனுக்காகத் அனைத்துக் கட்சிகளுடன் தொடர்ந்து பயணிக்கும் பணிகளை தி.மு.கழகம் என்றென்றும் மேற்கொள்ளும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *