அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் நியமித்த மூன்று மத்தியஸ்தர்கள் இன்று (மார்ச் 12) அயோத்திக்குச் சென்று பணியைத் தொடங்கவுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில், மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது. ஓய்வு பெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில், ஆன்மிகவாதி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட மத்தியஸ்தக் குழுவை அமைத்தது. எட்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இது தொடர்பான விசாரணை ரகசியமாக நடைபெற வேண்டுமெனவும், ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அயோத்தியில் மத்தியஸ்தர் குழு தங்குவதற்கான இடங்கள், பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அரங்கங்கள், அறைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மத்தியஸ்த குழுவுக்கு உதவுவதற்காக அவத் பல்கலைக்கழக வளாகத்தில் செயலகம் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அயோத்தி செல்லும் மத்தியஸ்தர் குழு, உத்தரப் பிரதேச அரசு செய்துள்ள ஏற்பாடுகளை முதலில் பார்வையிடுகின்றனர். பின்னர், பணிகளைத் தொடங்கவுள்ளனர்.
“ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டுவதற்கு மத்தியஸ்தம் தேவையில்லை. இந்து மக்கள் ஒன்று சேர்ந்து ராமர் கோயிலைக் கட்டியே தீருவோம்” என ஸ்ரீவில்லிபுத்தூர் ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார். அயோத்தி விவகாரத்தில் மூன்று பேர் கொண்ட குழுவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், மக்கள் ஒன்று சேர்ந்து எடுக்கும் முடிவுக்கு வேறு யாரும் வேண்டியதில்லை என்றும் கூறியுள்ளார்.�,