தமிழகத்தில் அம்மா மருந்தகங்கள் மூடப்பட்டு வருவதாகவும், அவற்றை பழையபடி செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று (ஜூலை 13) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்கள் அடுத்தடுத்து மூடப்பட்டு வருவதாக வெளியாகும் செய்திகள் வேதனை அளிக்கிறது. தரமான மருந்துகளைக் குறைவான விலையில் தமிழக மக்களுக்கு வழங்க வேண்டுமென்ற உன்னத நோக்கத்தில் 2014ஆம் ஆண்டில் ஜெயலலிதா இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்பட்டுவந்த இம்மருந்துக் கடைகளால் மக்கள் பெருமளவில் பயனடைந்து வந்தனர். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அம்மா மருந்தகங்கள் படிப்படியாகப் பொலிவிழந்தன. ‘அம்மாவின் ஆட்சியை நடத்தி வருகிறோம்’ என்று மூச்சுக்கு மூச்சு சொல்லி வரும் தமிழக அரசு அம்மா மருந்தகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒப்புக்கொண்டபடி ஊதியம் கொடுக்கவில்லை என புகார்கள் எழுந்துள்ளன.
மருந்து விற்பனை நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையும் உரிய நேரத்தில் அளிக்கப்படாததால் அவர்கள் மருந்துகளை விநியோகிப்பதில் சுணக்கம் காட்டுகின்றனர். மேலும், காலாவதியான மருந்துகளைத் திருப்பிக் கொடுத்தாலும் அதற்குரிய பணத்தை மருந்து நிறுவனங்கள் தருவதில்லை எனவும் அந்தத் தொகையை மருந்தாளுநர்களின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அம்மா மருந்தகங்களில் பணிபுரிகிற மருந்தாளுநர்கள் விரக்தியில் வேலையை விட்டுச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. கூட்டுறவுத் துறை அதிகாரிகளின் இத்தகைய அலட்சியமான நிர்வாகத்தால் தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் அடுத்தடுத்து அம்மா மருந்தகங்கள் மூடப்பட்டு வருகின்றன. மற்ற இடங்களிலுள்ள மருந்தகங்களும் இதே நிலையை நோக்கி நகர்கின்றன.
இதைச் சரிசெய்ய வேண்டிய கூட்டுறவுத் துறை அமைச்சரோ கண்டும் காணாமல் இருக்கிறார். எனவே, அம்மா மருந்தகங்களை மீண்டும் பழையபடி செயல்பட வைப்பதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**
**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**
�,”