சட்ட மேதை அம்பேத்கர், பிரதமர் மோடி ஆகியோர் பிராமணர்கள் என்று குஜராத் சபாநாயகர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் காந்திநகரில் கடந்த ஞாயிறன்று நடந்த மாநாடு ஒன்றில் அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி கலந்துகொண்டு பேசினார். அப்போது,” அம்பேத்கரைப் பிராமணர் என்று அழைப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. படித்த நபரைப் பிராமணர் என்று அழைப்பதில் தவறு இல்லை. அந்த வகையில் பிரதமர் மோடியும் பிராமணர்தான் என்று நான் கூறுவேன்” என்று தெரிவித்தார்.
மேலும், ராமரை சத்திரியர் என்றும் கிருஷ்ணரை இதர பிற்படுத்த வகுப்பைச் சார்ந்தவர் என்றும் குறிப்பிட்டார்.
**பாஜகவில் எதிர்ப்பு**
அவரது கருத்துக்கு பாஜகவிலிருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக உதித் ராஜ், “சபாநாயகருக்கு இந்திய வரலாறு தெரியுமா?. இத்தகைய கருத்தை அவர் ஏன் கூறினார் என்று தெரியவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிறன்று குஜராத்தின் உனா பகுதியைச் சேர்ந்த ஏராளமான தலித் மக்கள் புத்த மதத்துக்கு மாறினர். தங்களை யாரும் இந்துவாக மதிக்கவில்லை. கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை என்பதால் மதம் மாறியதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். இந்தச் சம்பவம் குறித்தும் ராஜ் வேதனை தெரிவித்துள்ளார். சமூக அநீதியே இத்தகைய சம்பவங்களுக்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ள அவர், “மீசை வைத்திருக்கும் காரணத்திற்காக எல்லாம் தலித்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இத்தகைய சம்பவங்களுக்கு என்ன மாற்று அவர்களிடம் உள்ளது என்று தெரியவில்லை. இது மிகவும் ஆபத்தான நிகழ்வு” என்று வேதனை தெரிவித்துள்ளார்.�,