தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் திருமணத்துக்கு நேரில் சென்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு வந்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். சமீபத்தில் திருமணப் பந்தத்தில் இணைந்த தனது இளைய மகள் சௌந்தர்யாவையும் உடன் அழைத்துச் சென்று, நிகழ்ச்சி முழுவதும் கண்டு ரசித்துவிட்டு வந்திருக்கிறார் ரஜினி.
2018ஆம் ஆண்டின் இறுதியில் மும்பையிலிருந்து கிளம்பிய அதிர்வலை, இந்தியா முழுவதும் பரவியது. அது, 700 கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணம். தற்போது 2019ஆம் ஆண்டின் முதல் பாதி முடிவதற்குள்ளாக, முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் திருமணத்தை மிகப்பெரும் பொருட்செலவில் நடத்தியிருக்கிறார்கள்.
முன்னாள் பிரிட்டீஷ் பிரதமர் டோனி பிளேர், கூகுள் CEO சுந்தர் பிச்சை, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செகரெட்ரி ஜெனரல் பான் கி மூன், சச்சின் டென்டுல்கர், ஷாருக் கான் உள்ளிட்ட பல முக்கிய நபர்களைத் திருமண விழாவில் காண முடிந்தது. முகேஷ் அம்பானி ஈடுபட்டுள்ள தொழில்கள் அனைத்திலும் இருக்கும் நட்பு வட்டாரங்கள் அனைத்தும் திருமண விழாவைக் கோலாகலமாக மாற்றின.
உலகின் மிகப்பெரிய வைர விற்பனை மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றான ‘Rosy Blue’ நிறுவனத்தின் உரிமையாளர் ரசூல் மேத்தாவின் இளைய மகள் ஷ்லோகா மேத்தாவை மனைவியாக ஏற்றுக்கொண்ட திருமண நிகழ்வு, ஜியோ வேர்ல்டு சென்டர் அரங்கில் நடைபெற்றது. அரங்கு என்பதைவிட, நகரம் என்பது அந்த விழாவுக்கு நேர்மை சேர்க்கும்.
திருமணத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்த திருமண ஜோடியை, பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் வரவேற்று ஆடல் பாடலுடன் அழைத்துச் சென்றனர். முகேஷ் அம்பானி உள்ளிட்ட குடும்பத்தினரும் அந்த நடனத்தில் பங்குகொண்டது அங்கிருந்த அனைவரையும் ஆட வைத்தது.
உலகம் முழுவதிலுமிருந்து வரவழைக்கப்பட்ட சமையற்கலைஞர்களால் உருவாக்கப்பட்ட சிறந்த உணவுகள், நீர்-நிலம்-ஆகாயம் என மூன்று வகைகளில் கட்டமைக்கப்பட்ட நடன நிகழ்ச்சி எனப் பல்வேறு சிறப்பம்சங்களை இந்த விழா கொண்டிருந்தது.
இஷா அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு தொடர்ந்து நான்கு நாட்களுக்கு 5,000 பேருக்கு மூன்று வேளை உணவு வழங்கியது போல, இம்முறை 2,000 பேருக்கு நீடா அம்பானி உணவு வழங்கினார்.
�,”