அமைச்சர் வீட்டுத் துக்கம்: திமுகவினர் நேரில் அஞ்சலி!

Published On:

| By Balaji

சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் தனது ஒரே தங்கையான வள்ளி மகன் லோகேஷை பெற்றெடுக்காத மகனாக ஆசையாக வளர்த்துவந்தார். அந்த ஆசை மகன் நேற்று (அக்டோபர் 6) அமைச்சர் வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்டார்.

லோகேஷுக்கு அம்மா இல்லை, அப்பா இருந்தும் அவர் வேறு ஒரு வாழ்க்கையைத் தேடிக்கொண்டார். அம்மா, அப்பா இல்லாத பிள்ளை என்பதால் எந்தவிதமான குறையும் ஏக்கமும் வந்துவிடக்கூடாது என்று அவ்வளவு சொகுசாக வளர்த்தார் அமைச்சர் சண்முகம்.

இருந்தாலும் பாசத்திற்கு அம்மா, அப்பா இல்லாதது,லோகேஷுக்கு சொல்லமுடியாத அளவுக்குக் குறையாகவே இருந்துள்ளது, இதுவே லோகேஷை பலமுறை வாட்டியெடுத்துள்ளது என்கிறார்கள் அவரின் நண்பர்கள் வட்டாரத்தினர்.

அமைச்சர் வீட்டில் எப்போதும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் விக்கிரவாண்டி இடைத் தேர்தல் என்பதால் குடும்பத்தார்கள் கட்சியினர் அனைவரும் தேர்தல் பணிக்குச் சென்றுவிட்டார்கள். லோகேஷ் வழக்கமாகவே வீட்டிலிருக்கும்போது காலையில் எழுந்திருக்கமாட்டார், 12.00 மணி வரையில் தூங்குவாராம், அவரது தூக்கத்தை வீட்டார்கள் யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்களாம். நேற்று அக்டோபர் 6 ஆம் தேதி, மாலை வரையில் எழுத்திருக்கவில்லை என்ற சந்தேகப்பட்டுத்தான் பர்சனல் ஓட்டுநர் கதவைத் தட்டியபோதுதான் லோகேஷ் தூக்கிலிட்டிருப்பது தெரியவந்துள்ளது.

லோக்கேஷ், தனது ஐந்து மாமாக்களையும் சண்முகம் மாமா, ராதா மாமா என்று பெயர் சொல்லித்தான் அழைப்பார். மாமாக்களும் பாசத்துடன் என்ன லோகேஷ் என்றுதான் கேட்பார்கள். நேற்று இரவே லோகேஷ்க்கு அஞ்சலி செலுத்துவதற்கு, அதிமுக தொண்டர்கள் முதல் அமைச்சர்கள் வரையில் வந்துவிட்டார்கள். இன்று காலையில் அனைவரையும் தொகுதிக்குச் சென்று தேர்தல் வேலைகளை கவனிக்கச்சொல்லி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததால் தொகுதி பொறுப்பாளர்கள் தொகுதியில் இறங்கித் தேர்தல் பணியில் தீவிரம் காட்டிவருகிறார்கள்.

விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் திமுக முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் அமைச்சர் சண்முகத்திடமும், அண்ணன் ராதாவிடமும் நல்ல இணக்கமாக இருந்துவருகிறார்கள். மேடையில் விமர்சனம் செய்துகொள்வார்கள், மேடையைவிட்டு வெளியேறியதும் பரஸ்பரமாகப் பேசிக்கொள்வார்கள்.

அமைச்சர் தங்கை மகன் தற்கொலை செய்தி கேள்விப்பட்டு, திமுக மாவட்டச் செயலாளர்களான பொன்முடி, மஸ்தான், மாசிலாமணி, போன்றவர்கள் இரவே சென்று ஆறுதல் சொல்லத் தவியாய் தவித்துள்ளார்கள். தேர்தல் நேரம் என்பதால், திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஒப்புதல் பெற்றபிறகு, இன்று காலையில் பொன்முடி தலைமையில் அனைத்து நிர்வாகிகளும் சென்று லோகேஷ்க்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்துள்ளார்கள். அதன் பிறகு ஜெகத்ரட்சகன் எம்.பி, சென்று ஆறுதல் சொல்லிவிட்டு வந்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், திமுகவினர் வந்துவிட்டு போய்விட்டார்களா, இருக்கிறார்களா என்று கேட்டு தெரிந்துகொண்டு இன்று காலை 11. 40 மணிக்கு வந்தவர் லோகேஷுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அமைச்சர் குடும்பத்தாரிடம் கொஞ்சநேரம் ஆறுதலாகப் பேசிவிட்டு விடைபெற்றுள்ளார்.

முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் அஞ்சலி செலுத்த வருவார்களா என்று அதிமுக வட்டாரத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share