அமைச்சர் விஜயபாஸ்கர் மீது அமித் ஷாவிடம் ஆர்.எஸ்.எஸ். புகார்!

Published On:

| By Balaji

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நாளை (அக்டோபர் 8) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊர்வலத்துக்கு மாவட்ட எஸ்.பி. தடை விதித்துள்ளார். இதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர்தான் பின்னணியில் இருக்கிறார் என்று ஆர்.எஸ்.எஸ்சினர், பாஜகவினர் புகார் கூறுகிறார்கள்.

இதுபற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷா வரை புகார் அளித்திருக்கும் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் டி.எஸ். பாண்டிராஜிடம் பேசினோம்.

“அக்டோபர் 7 ஆம் தேதி இலுப்பூரில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கும் காந்தி ஜெயந்தி பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி கேட்டு கடந்த வாரமே லோக்கல் போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்துவிட்டோம். இந்நிலையில் நாளை நிகழ்ச்சிக்காக சுமார் பத்தாயிரம் பேர் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் இன்று மாவட்ட எஸ்.பி. செல்வராஜ் அழைத்து, ‘சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கவில்லை என்று கூறுகிறார். இதன் பின்னால் முழுக்க முழுக்க அரசியல் இருப்பதாக சந்தேகப்படுகிறோம். அமைச்சர் விஜயபாஸ்கரின் ஊரான இலுப்பூரில் ஆர்.எஸ்.எஸ்,. பாஜகவின் செல்வாக்கு நிலைநாட்டப்படும் என்ற பயத்தில் அமைச்சரே இதற்குப் பின்னால் இருப்பதாக சந்தேகப்படுகிறோம். இதுபற்றி அமைச்சரிடம் தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை.

இந்நிலையில் இதை டெல்லி தலைமை வரை கொண்டு சென்றோம். அவர்களது ஆலோசனையின் பேரில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு புகார் அனுப்பியுள்ளோம்” என்றார்.

நாம் புதுக்கோட்டையில் விசாரித்தபோது, “இலுப்பூரில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கிறார்கள். அதனால் பாஜகவும் ஆர்.எஸ்.எஸும் இப்போது அப்பகுதியை குறிவைத்துக் களமிறங்கியுள்ளன. இந்த நிகழ்ச்சியால் சட்டம் ஒழுங்கு கெடலாம் என்று கருதி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்” என்று கூறுகிறார்கள்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share