அமைச்சர் மீது புகார்: வருமான வரித் துறைக்கு உத்தரவு!

Published On:

| By Balaji

அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான புகார் மீது விசாரணை நடத்தக் கோரிய வழக்கில் வருமான வரித் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலப் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் வீரமணி,தனது அதிகாரத்தை பயன்படுத்தி தங்களை சம்பந்தப்பட்ட நிலத்தில் இருந்து காலி செய்யும்படி மிரட்டியதாகவும், இதுசம்பந்தமான புகார் மீது விசாரணை நடத்த சட்டமன்ற செயலாளர், அரசு கொறடா மற்றும் முதல்வருக்கு உத்தரவிடக் கோரியும் வேலூரைச் சேர்ந்த ராமமூர்த்தி மற்றும் ஜெயப்பிரகாஷ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

ஆனால், இந்த விவகாரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும், தான் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடவில்லை எனவும் அமைச்சர் வீரமணி உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அமைச்சர் வீரமணியின் வீடு உட்பட 33 இடங்களில் சோதனை நடத்தி வருமான வரித் துறையினர், ஆவணங்களை கைப்பற்றியதாகவும் தகவல் வெளியானது.

இதைச் சுட்டிக்காட்டி, இந்த வழக்கில் வருமான வரித் துறையை எதிர் மனுதாரராக சேர்க்கக் கோரி ராமமூர்த்தி மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் இணைப்பு மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை இன்று (மார்ச் 12) விசாரித்த நீதிபதி ரவிச்சந்திர பாபு, வருமானவரித் துறையை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்து பதிலளிக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை ஏப்ரல் 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share