அமைச்சரின் வளர்ப்பு மகன் தற்கொலை!

Published On:

| By Balaji

சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீடு, திண்டிவனம் மொட்டை பிள்ளைத் தெருவில் உள்ளது. சண்முகத்தின் தங்கை வள்ளியின் மகன் லோகேஷும் அந்த வீட்டில்தான் வசித்துவருகிறார். நேற்று (அக்டோபர் 6) காலை உணவை முடித்துக்கொண்டு இரண்டாவது மாடியில் உள்ள அறைக்குச் சென்ற லோகேஷ், மாலை வரை வரவில்லை. அவரை சாப்பிட அழைப்பதற்காக குடும்ப டிரைவர் மாடிக்குச் சென்றுள்ளார். ஆனால், எவ்வளவு தட்டியும் லோகேஷ் கதவை திறக்காததால், அமைச்சருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உடனே அங்கு விரைந்த காவலர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, லோகேஷ் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. லோகேஷின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு, சி.வி.சண்முகம் இல்லத்திற்கு லோகேஷின் உடல் கொண்டுவரப்பட்டு உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தந்தையான வேணுகோபால் எம்.பி.யாக இருந்தவர். இவருக்கு சி.வி.சண்முகம், சி.வி.ராதாகிருஷ்ணன் உட்பட ஐந்து மகன்கள், ஒரு மகள். ஒரே மகளான வள்ளி காதல் திருமணம் செய்துகொண்டார். சில ஆண்டுகளில் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சொந்த வீட்டுக்கே வந்துவிட்ட வள்ளி, லோகேஷ் கைக் குழந்தையாக இருக்கும்போதே இறந்துவிட்டார். லோகேஷ் சி.வி.சண்முகம் வீட்டில் மகன் போல் வளர்ந்துவருகிறார். தங்கை மகன் என்றாலும் தன் மகனைப் போல வளர்த்து வந்துள்ளார் சண்முகம்.

சென்னையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இன்ஜினீயரிங் படித்த லோகேஷ், சில வருடங்களாக ஆஸ்திரேலியாவில் இருந்துவிட்டு, ஆறு மாதங்களுக்கு முன்புதான் தமிழகம் திரும்பியிருக்கிறார். 26 வயதாகும் லோகேஷுக்குத் திருமணம் செய்து வைக்க சமீப காலமாக அவரது குடும்பத்தினர் வரன் தேடியுள்ளனர். இந்த நிலையில்தான் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை. இதுதொடர்பாக அவரது செல்போனை ஆய்வுசெய்துவரும் போலீசார், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் இருந்திருப்பதாக விசாரணையில் தெரிய வருகிறது.

ஏற்கெனவே அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரர் ராதாகிருஷ்ணன் மகன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுவே அவரது குடும்பத்தினரை வெகுவாக பாதித்திருந்தது. இந்த நிலையில் சொந்த மகன் போல் வளர்ந்த லோகேஷ் தற்கொலை செய்துகொண்டது சண்முகம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share