அமைச்சரவைக் கூட்டம்: முற்றுகையிட்ட எம்.எல்.ஏ.க்கள்!

Published On:

| By Balaji

புதுச்சேரி மாநிலத்தில் பொதுமக்களுக்கு இலவசப் பொருட்கள் வழங்காததைக் கண்டித்து அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தை 12 எம்.எல்.ஏ.க்கள் இணைந்து முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளி, பொங்கல் போன்ற விழா நாட்களுக்காக இரண்டு வாரங்களுக்கு முன்பே அரசின் இலவச பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுவிடும். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மக்களுக்கு வேட்டி, சேலை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் இன்னும் வழங்கப்படவில்லை.

இலவச பொருட்கள் வழங்குவது தொடர்பாக சட்டமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று (அக்டோபர் 30) முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடந்துகொண்டிருந்தபோதே, அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன், திமுக எம்.எல்.ஏ சிவா, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தீப்பாய்ந்தான், விஜயவேணி, பாலன் உட்பட 12 எம்.எல்.ஏ.க்கள் கூட்ட அரங்கை முற்றுகையிட்டனர்.

இதனையறிந்த பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம் அவசரமாக வெளியில் வந்து “அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது, உள்ளே வரக்கூடாது” என்று தடுக்க, உடனே அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன், ‘நீங்க ஐந்துபேர் மட்டும்தான் கவர்ன்மெண்டா…30 எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்ததுதான் கவர்ன்மெண்ட். மக்கள் பிரச்சனையை பேசவேண்டும் முதல்வரை வெளியே வரச்சொல்லுங்கள்” என்று கூறினார்.

இதனையடுத்து முதல்வர் நாராயணசாமி வெளியில் வந்து அவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது நடந்தவை குறித்து அன்பழகன் எம்.எல்.ஏ நம்மிடம் கூறுகையில், “ முதல்வரைப் பார்த்து சட்டமன்றத்தில் அறிவித்த இலவசப் பொருட்களை இதுவரையில் வழங்கவில்லை. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஆறு நாட்கள்தான் உள்ளது. வழக்கமாக வழங்கக்கூடிய வேட்டி, சேலை, சர்க்கரை கூட இன்னும் வழங்கப்படவில்லை என்று கேட்டேன். அதற்கு முதல்வர், ‘வேட்டி, சேலை, சர்க்கரைக்கு டெண்டர் விடுவதற்கு காலதாமதமாகிவிட்டது என்று மழுப்பலான பதிலைச் சொன்னார்.

“அப்படி என்றால் குடும்ப அட்டைக்குத் தலா ஆயிரம் ரூபாய் கொடுத்துவிடுங்கள். அது நன்றாக இருக்கும், ஊழலும் நடைபெறாது’ என்று நான் கூறியதும், நல்ல யோசனைதான் அதையே செய்ய முயற்சிக்கிறேன். ஆனால் கவர்னர் என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லையே? என புலம்பியபடியே முதல்வர் மீண்டும் அமைச்சரவைக் கூட்டத்திற்குச் சென்றார்” என்று தெரிவித்தார்.

அமைச்சரவைக் கூட்டத்தையும் முதல்வரையும் சுமார் 1 மணி நேரம் முற்றுகையிட்டு முடக்கியதாக குறிப்பிட்ட அன்பழகன், இனி புதுச்சேரி மக்கள் விடிவுக்காக போராட்டம் நடத்துவதுதான் தீர்வு என்றும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

அமைச்சரவை கூட்டத்தை முற்றுகையிட்ட சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share