அமெரிக்க நாட்டிலிருந்து இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்களுக்கான சுங்க வரியை உயர்த்துவதற்கான கால வரம்பை மே 2ஆம் தேதி வரை இந்திய அரசு நீட்டித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பிறகிலிருந்தே உலக நாடுகளுடனான தனது வர்த்தக உறவை அமெரிக்கா கடுமையாக்கி வருகிறது. குறிப்பாக சீனா மீது பெரிய வர்த்தகப் போரையே தொடுத்தது. சர்வதேச ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் இந்தியாவுக்கும் நெருக்கடிகளை ஏற்படுத்துவதாக உள்ளன. குறிப்பாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியம் பொருட்களுக்கு அதிக வரிகளை விதித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்களுக்கான வரிகள் உயர்த்தப்படும் என்று இந்திய அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு 2018 ஜூன் மாதத்திலிருந்து இதுநாள் வரையில் ஆறு முறை இதற்கான கால வரம்பு இந்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும், வால்நட், பாதாம், பருப்பு உள்ளிட்ட 29 பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து மே 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தைப் பலப்படுத்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதனால்தான் கால வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.�,