அதிமுக வேட்பாளர் தேர்வுக்கான இரண்டாம் கட்ட நேர்காணல் இன்று பிற்பகல் நடைபெற்ற நிலையில், பன்னீர்செல்வம் மகன் ரவீந்திர நாத்தும் நேர்காணலில் கலந்துகொண்டார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் இன்று (மார்ச் 11) காலை முதல் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது. பிற்பகலில் தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது.
தேனி மற்றும் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு தாக்கல் செய்திருந்த பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தும் நேர்காணலில் கலந்துகொண்டார். நேர்காணலில் கலந்துகொள்ள வந்த அவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குப் பூங்கொத்து கொடுத்து தன்னுடைய சுயவிவரக் குறிப்பை வழங்கினார். எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அவரை நேர்காணல் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், “கட்சியில் என்னுடைய செயல்பாடுகள் குறித்தும், எத்தனை வருடமாகக் கட்சியில் இருக்கிறேன் என்பது குறித்தும் நேர்காணலில் கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறியுள்ளேன். வேட்பாளர் தேர்வு குறித்து தலைமை முடிவு செய்யும்” என்று தெரிவித்தார்.
குடும்ப அரசியலுக்கு எதிரானவராகக் கருதப்படும் பன்னீர்செல்வத்தின் மகனாகிய நீங்கள் தேர்தலில் போட்டியிடுகிறீர்களே என்ற கேள்விக்கு, “நான் அமெரிக்காவில் படித்துமுடித்த கையோடு மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து இறங்கி தலைமைக் கழகத்திற்கு நேராக வந்து என்னுடைய அப்பா பதவியில் இருக்கிறார், எனக்கு சீட் கொடுங்கள் என்று கேட்கவில்லை. என்னுடைய 18ஆவது வயதிலிருந்து கட்சிக்காகப் பணியாற்றிவருகிறேன். தற்போது எனக்கு 39 வயது. இந்த 21 வருடங்களில் தேனி மாவட்டத்தில் நான் போகாத ஊரே கிடையாது. படிப்படியாக முன்னேறி இந்த நிலைக்கு வந்துள்ளேன். நான் வளர்ந்த பகுதி முன்னேற வேண்டும் என்பதற்காகத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என சீட் கேட்டுள்ளேன்” என்று பதிலளித்துள்ளார்.�,