கடந்த வாரம், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில் இந்திய ஐ.எஸ்., தீவிரவாதிகள் 13 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நங்கார்ஹரில் உள்ள அச்சின் மாவட்டத்தில் மோமண்ட் தாரா என்னும் இடத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் சுரங்கம் அமைத்து தாக்குதலில் ஈடுபடுகின்றனர் என தகவல் கிடைத்தைத் தொடர்ந்து, அவர்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார்
அதைத் தொடர்ந்து, கடந்த 13ஆம் தேதி இரவு 7.32 மணி அளவில் எம்.சி.–130 ரக சரக்கு விமானம் மூலம் 9,797 கிலோ எடைகொண்ட ஜி.பி.யூ 43 ரக வெடிகுண்டு தீவிரவாதிகளின் முகாம்கள் மீது வீசப்பட்டது. சுமார் 30 அடி நீளமும் மூன்றரை அடி விட்டமும்கொண்ட இந்த வெடிகுண்டு விழுந்து வெடித்துச் சிதறியதில் தீவிரவாதிகள் அமைத்திருந்த சுரங்கம் மற்றும் முகாம்கள் முற்றிலுமாக அழிந்தது. இந்தத் தாக்குதலில் சுமார் 96 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ஊடகம் நேற்று (ஏப்ரல், 18) செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‘அமெரிக்கா நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 13 இந்திய ஐ.எஸ். தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். அதில், இரு இந்திய தீவிரவாதிகள் முகமது மற்றும் அல்லாக் குப்தா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்’.
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் இந்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை என தேசிய புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, கேரள மாநிலத்தில் இருந்து 21 பேர் ஈரான் வழியாக ஆப்கானிஸ்தான் சென்று ஐ.எஸ்., தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இணைந்துவிட்டனர். இதுதொடர்பான வழக்குகளை தேசிய புலனாய்வுத் துறை விசாரித்து வருகிறது. மேலும் காணாமல்போனவர்களின் உறவினர்களுடன் தொடர்பில் இருப்பதாக தேசிய புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
அனைத்து வெடிகுண்டுகளுக்கும் தாய் என்றழைக்கப்படும் ஜி.பி.யூ–43 ரக வெடிகுண்டு, 2003ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. இதில் பயன்படுத்தப்படும் வெடிமருந்து 11 டன் அளவுக்கு இணையான வெப்பசக்தியை வெளியேற்றி பலத்த சேதத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற சக்திவாய்ந்த வெடிகுண்டை தீவிரவாதிகளுக்கு எதிராக முதன்முறையாக அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது.�,