அன்புமணியிடம் கேள்வி: அதிமுக தொண்டரை தாக்கிய செம்மலை

Published On:

| By Balaji

அன்புமணி ராமதாஸிடம் கேள்வி எழுப்பிய அதிமுக தொண்டர் ஒருவரை, எம்.எல்.ஏ செம்மலை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 17 நாட்களே உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர். விமர்சனங்களும் பதிலடியும் அனல்பறக்க, சர்ச்சைகளுக்கும் குறைவில்லாமல் பிரச்சாரங்கள் நகர்கின்றன.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸ் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். தருமபுரி அடுத்த மேச்சேரி கிராமத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ செம்மலை ஆகியோர் கலந்துகொண்டனர்.

அன்புமணி பேசிக்கொண்டிருந்தபோது அவரை நோக்கி முன்னேறிச் சென்ற அதிமுக தொண்டர் தங்கராஜ் என்பவர், “கடந்த முறை இங்கதான வெற்றிபெற்றீர்கள். அதுக்கு அப்புறம் எங்க போனீங்க. 5 வருஷமா எங்களுக்கு என்னைய்யா செஞ்சீங்க. 8 வழிச் சாலைக்கு எதிராக நாங்க போராடியபோது எங்க போனீங்க ஐயா” என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். தங்கராஜ் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும்போதே அன்புமணி அருகில் நின்றிருந்த மேட்டூர் எம்.எல்.ஏ செம்மலை, அவருடைய கன்னத்தில் மாறிமாறி அறைந்து அப்புறப்படுத்தச் சொன்னார்.

இதனைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸின் பாதுகாப்புக்காக வந்த போலீசார் தங்கராஜை இழுத்துச் சென்று பிரச்சாரம் நடந்த பகுதிக்கு வெளியே விட்டனர். அப்போது அவர் மீது சிலர் தாக்குதலில் ஈடுபட்டதால், மயக்கமுற்று கீழே விழுந்தார். இந்த சம்பவத்தை எதிர்பாராத அன்புமணி பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

ஒரத்தநாட்டில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் வாகனத்தின் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அன்புமணியிடம் கேள்வி எழுப்பிய அதிமுக தொண்டரை அதிமுக எம்.எல்.ஏ.வே தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share