அன்னையர் தினம்: இன்றைய அம்மாக்களுக்கு என்ன தேவை?

public

ஆஸிஃபா

காரில் செல்லும்போது, FM கேட்பது என் அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும். இரண்டு தினங்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன். ஏதோ நிகழ்ச்சி ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. “அம்மா போன் பார்த்துட்டு, குழந்தைக்கு சாப்பாடு கொடுக்காம இருந்திருக்காங்க. ஸோ அம்மாக்களே, போன் பார்ப்பதைக் குறைச்சுட்டு குழந்தைகளை கவனியுங்க!” என்று யாரோ ஒரு பெண் பேசிக்கொண்டிருந்தார்.

இந்த மொபைல், சீரியல் விஷயத்தில் எப்போதுமே அம்மாக்களைப் பிடித்து இழுத்துக்கொண்டே இருப்பார்கள். ‘தூங்காம போன் பாக்கறா!’, ‘கேண்டி க்ரஷ்லையே உயிர விடுறா’, ‘சாப்பாடுகூட நேரத்துக்கு குடுக்கறதில்ல’ என்று பல விமர்சனங்கள் எழும். மொபைல் என்பது நம் அனைவரையுமே தனக்குள் இழுத்துக்கொள்ளும் பொருள். கையில் இருக்கும் மொபைலில் உலகையே பார்க்கலாம். அப்படியான மொபைலை அம்மா பயன்படுத்தும்போது மட்டும் அதிகமான விமர்சனங்கள் எழுவது ஏன்?

அன்பு, தியாகம், தன்னலம்பாராமை என்ற க்ளிஷேவான பண்பு நலன்களை அம்மாக்களின் தலையில் மொத்தமாகச் சுமத்திவிடுவது நம் வேலையாக இருக்கிறது. உண்மையில், அம்மா என்றால் அன்புதான், தியாகம்தான். அவளுக்கு ஈடு யாரும் இல்லை. ஆனால், அனைத்தையும் தாண்டி, அம்மா ஒரு தனிநபர்; அவளுக்கென்று விருப்பங்களும் ஆசைகளும் வேலைகளும் இருக்கும். அதுவும், 21ஆம் நூற்றாண்டில், டிஜிட்டல் உலகில், ஓர் அம்மாவுக்குப் பத்துக் கை போதவில்லை! வேலைக்குச் செல்வது, தன்னுடைய ஹாபியை விடாமல் இருப்பது, உடற்பயிற்சி என்று பல விஷயங்களையும் ஒரே நேரத்தில் எப்படி ஓர் அம்மாவால் சமாளிக்க முடிகிறது?

**அம்மாக்கள் அன்றும் இன்றும்**

திருமதி பார்வதி, பல பள்ளிகளில் யோகா, ஸ்கேட்டிங் பயிற்சியாளர். விளையாட்டுப் பொருட்கள் விற்பனையாளர். தையல் கடை நடத்துகிறார். 9, 14 வயதுகளில் இரு மகன்களையும் சமாளித்துக்கொண்டு, கிடைக்கும் சிறிது நேரத்தில் பாடல்களைக் கேட்கிறார். இவர் சொன்ன மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, “முன்பெல்லாம் கூட்டுக் குடும்பமாக இருந்தோம். அப்போது, அம்மாவின் வேலையை அத்தை, சித்தி, பாட்டி என்று பகிர்ந்துகொண்டனர். ஆனால், தன் பிள்ளைகளின் மீதான அவள் உரிமை குறைவாகவே இருந்தது. அவளுக்கும் பிள்ளைக்குமான வெளியில், தாத்தா, பாட்டி முதலாக அனைவரும் இருந்தனர். அம்மாவுக்கான வேலைப்பளு பிறரால் பகிர்ந்துகொள்ளப்பட்டது என்றாலும் அவளின் விருப்பங்கள் எப்போதுமே பின்னாலேயே இருந்தன.”

கூட்டுக் குடும்பங்கள் பற்றிய இந்தப் பார்வை சற்றுப் புதிதாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. இன்று எடுத்துக்கொண்டால், ஓர் அம்மாவுக்கு அதிகமான உரிமையும் தன் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசக்கூடிய வெளியும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஓர் அம்மா, தன் பிள்ளையுடன் செலவிடும் நேரம் குறைவானதாக இருந்தாலும், தரமானதாக இருக்கிறது. அந்த நேரத்தில் யாரும் குறுக்கீடு செய்வதில்லை. யோசித்துப் பார்த்தால், பல சிக்கல்களுக்கு மத்தியிலும் இன்றைய அம்மாக்களின் வாழ்க்கை சுதந்திரமானதாக இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.

“அது மட்டுமில்லாமல், இன்றைய அம்மா, குழந்தைகள் ஆகியோரின் உணர்ச்சியின் சமநிலை அதிகமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்றாலோ, பிரச்சினை என்றாலோ, பையனோ பெண்ணோ அம்மாவுக்குத் துணையாக இருக்கிறான்/றாள். எவ்வளவு சிக்கல்கள் வந்தாலும், ஓர் அம்மாவால் தனியாகச் சமாளிக்க முடிகிறது. அந்த வலிமை இன்றைய அம்மாவுக்கு இருக்கிறது. எத்தனையோ சிங்கிள் மதர்ஸ் இருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் வலிமை முன்பு வெகு சிலருக்கே இருந்தது” என்கிறார் பார்வதி.

காலம் மாற மாறத் தடுமாற்றங்களுக்கு மத்தியில் நாம் முன்னேறிக்கொண்டுதான் இருக்கிறோம். அதுவும், உளவியல் ரீதியாக ஒருவருக்கு மிகச் சிறு வயதிலேயே வலிமை ஏற்படுகிறது. பல வீடுகளிலும் இன்று “என் குழந்தைதான் எனக்கு அம்மா/அப்பா மாதிரி” எனச் சொல்லப்படுவதைக் கேட்க முடியும். அப்படியான வளர்ப்புக்குக் காரணம் அம்மாதான்.

நேற்று – இன்று – நாளை என்ற வகையில், அம்மாவைப் பற்றிய மூன்று கருத்துகளை முன்வைக்கிறார் பார்வதி.

“அன்றைய அம்மாவின் அன்பும் அக்கறையும் வேறு லெவல். அவர்களின் முழு எண்ணமுமே பிள்ளைகள் பற்றியதுதான். ஆனால், குழந்தைகளின் எண்ணங்களுக்கு, கனவுகளுக்கு மதிப்பு கொடுக்கவில்லை. இன்றைய அம்மா, தோழி போல இருந்தாலும், ஒரு கட்டத்தில் தான் விட்ட கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்கிறார்கள். அது நிகழத்தான் செய்யும். ஒருவேளை, நாளைய அம்மா மாறக்கூடும். நெருங்கிய தோழியாக, குழந்தைகளுக்கான சிறகையும் கொடுத்து, வானமாகவும் இருக்கக்கூடும்!”

**தொழில்நுட்பம் தரும் உதவிகள்**

அம்மாக்கள் வானமாக இருப்பதையே விரும்புகிறார்கள். இதற்கிடையில், தங்கள் சிறகுகள் ஒடுக்கப்படுவதைக் கவனிக்க மறந்துபோகிறார்கள். அனைத்து வேலைகளுக்குப் பிறகு இரவில் வெகுநேரம் விழித்து போன் பார்ப்பதைத் தவறு எனச் சொல்பவர்களுக்கு ஒன்று புரிவதில்லை. அன்றைய நாளில், கணவனுக்காகவும் குழந்தைகளுக்காகவும் டிவி பார்க்காமல், பிடித்ததைச் செய்யாமல், முடிந்த அளவு அட்ஜஸ்ட் செய்துகொண்டிருந்த அம்மாக்களின் கோபம் குறைவதே கேண்டி க்ரஷ் போன்ற கேம்களின் மூலம்தான்!

உண்மையான கல்வியும் பார்வையும் அம்மாக்களின் வெளியை விரிவுபடுத்தியுள்ளன. தன் மகனையும் மகளையும் சரிசமமாக நடத்துவதற்கும், மகனுக்கும் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதையும், அவர்கள் கனவுகளின் ஆதாரமாக நாம் இருக்க வேண்டும் என்பதையும் அம்மாக்கள் புரிந்துகொண்டதற்கு அவர்களின் exposureதான் காரணம். வீட்டிலேயே இருக்கும் அம்மாவுக்கான வெளியைத் திறந்துவிட்டது டெக்னாலஜிதான் என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

தவறுகள் நிகழத்தான் செய்கின்றன. ஆனால், அதற்காக ஒட்டுமொத்தமாக அனைவரையும் குறைகூறிவிட முடியாது. அதிகமான கோபம் வரும்போது கேண்டி க்ரஷ் விளையாடினால் சரியாகிவிடும் என்று சொல்வார் என் அம்மா. அது அவரின் வடிகால். சிலருக்கு அது யூடியூபாக, வாட்ஸ் அப்பாக, பாடலாக இருக்கிறது. இன்றைய சூழலில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்று. அம்மாவுக்குத் தேவை “தியாகி, வாழும் தெய்வம், என் குலசாமி” போன்ற பட்டங்கள் இல்லை, அவள் வாழ்க்கையை அவள் வாழ்வதற்கான சுதந்திரம்.

“ரெண்டு குழந்தைக்கு அம்மாவாயாச்சு. இன்னும் என்ன ஜிமிக்கியும் கண் மையும் போட்டு சுத்துற?” என்பன போன்ற கேள்விகளைப் பலமுறை பலரும் கேட்டிருக்கலாம். அழகு என்பதும், அழகுப்படுத்திக்கொள்ளுதல் என்பதும் ஒவ்வொருவருக்குமான ஆசை இல்லையா? அது அம்மாவாக இருந்தால் என்ன, பாட்டியாக இருந்தால் என்ன? இந்த சிறு ஆசைகூட ‘அம்மா’ என்ற ஒரு சொல்லால் பல இடங்களில் மறுக்கப்படுகிறது. இன்று சூழல் மாறிவருகிறது என்றாலும், முழுமையாக மாறிவிடவில்லை. உண்மையில், மேக்கப் அம்மாவை அழகாக்குகிறதா என்று தெரியவில்லை; பல ஆண்டுகள் கழித்துக் கண் மை போட்டுக் கொண்ட மகிழ்ச்சிதான் பல அம்மாக்கள் முகத்தில் தெரியும்!

ஒருநாள் முழுக்க, வீட்டையும் கவனித்துக்கொண்டு, வேலைக்கும் சென்றுகொண்டு, தனக்குப் பிடித்ததையும் செய்துகொண்டு, தனக்கும் தன் குடும்பத்துக்கும் – குறிப்பாகக் குழந்தைகளுக்குத் – தேவையான உளவியல் துணையாகவும் இருந்துகொண்டு இருக்கும் அம்மா, ஐந்து நிமிடங்கள் போன் பார்க்கும்போது அதைப் பற்றி FMஇல் கலாய்க்கும் அளவுக்குச் செல்வது நியாயமா?

அம்மா விஷயத்தில் விதமான மனநிலைகள் உள்ளன. ஒன்று, அம்மாவை மிக உயரமான இடத்தில் வைத்து, அவளுக்கான ஆதர்ச லட்சியங்களையும், விதிகளையும் கொடுத்துத் தங்கக் கூண்டில் பூட்டிவிடுவது. இன்னொன்று, அவளுக்கான அக்கறையோ, நேரமோ தராமல், அவள் வாழ்க்கை அவளுக்கு மட்டும் என்று ஒதுங்கிவிடுவது. இரண்டுமே தவறுதான். அம்மாவைத் தனிநபராக, அவள் கனவுகளுக்கும் தனித்துவத்துக்கும் இடம் கொடுப்பதோடு, அவள் அன்புக்குத் தேவையான மரியாதையும் பதில் அன்பும் செய்தாலே போதும்.

இன்றைய உலகம், பல பிரச்சினைகளுக்கும் தவறுகளுக்கும் மத்தியில், சற்று அறத்தோடு இருப்பதோடு, முன்னேறிக்கொண்டும் இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் அம்மாக்கள்தான். அவர்கள் இல்லாமல், அவர்கள் அன்பு, அக்கறை, துணை இல்லாமல் நாம் யாருமே இன்று இங்கு இல்லை. நாம் பேசும் வார்த்தைகளுக்கும், காணும் கனவுகளுக்கும், நமக்குள் எரியும் சுடருக்கும் அம்மாவே ஆதாரம். தன் கனவுகளை இன்றும் விட்டுக்கொடுக்காமல், அனைத்தையும் சமாளித்துச் செல்லும் அம்மாக்களுக்கு ஆயிரமாயிரம் முத்தங்களையும் இளையராஜாவின் இசையையும் காற்றில் அனுப்பி வைக்கிறேன்!

*புகைப்பட உதவி: அகிலன், அபிமதி, கார்த்திக் ஜீவானந்தம்*

**

மேலும் படிக்க

**

.

[ டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்!](https://minnambalam.com/k/2019/05/11/55)

.

[ மோடி அரசைக் கலைக்க நினைத்த வாஜ்பாய்: யஷ்வந்த்](https://minnambalam.com/k/2019/05/11/24)

.

[ ஆகாஷ்- திலகவதி: என்ன நடந்தது? என்ன நடக்கிறது? முழு ரிப்போர்ட்!](https://minnambalam.com/k/2019/05/10/74)

.

.

[ திலகவதி கொலை: ராமதாஸுக்கு திருமாவளவன் பதில்!](https://minnambalam.com/k/2019/05/11/35)

.

[ இப்படியும் சில ரவுடிகள்! -தேனி அதிர்ச்சி!](https://minnambalam.com/k/2019/05/11/31)

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *