உலகமயமாக்கலை முழுவதுமாகத் தழுவிய ஒரு வளர்ச்சிப் பாதையில்தான் இந்தியா கடந்த முப்பதாண்டுகளாகப் பயணித்து வருகிறது. 1991இல் இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் பங்கு தேச மொத்த உற்பத்தியில் 14 விழுக்காடு. கடந்த சில ஆண்டுகளாக அதன் பங்கு சராசரியாக 45-50 விழுக்காடு வரை இருந்துவந்துள்ளது. மேலும், எப்பொழுது வேண்டுமானாலும் நாட்டிற்குள் வரலாம், நாட்டைவிட்டு வெளியே செல்லலாம் எனும் தன்மையுடைய குறுகிய காலத்தில் கொள்ளை லாபம் சம்பாதிக்க ஊகவணிகம் செய்யவரும் அந்நிய முதலீடுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், உலக சந்தையோடு இந்தியப் பொருளாதாரம் எந்த அளவிற்கு பின்னிப்பிணைந்துள்ளது என்பது புரியும்.
இது நமக்கு சொல்லும் செய்தி என்ன? உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் அதிர்வுகள் இந்தியப் பொருளாதாரத்திலும் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதுதான். உலகமயமாக்கலால் இந்தியாவில் பெரிதும் பயனடைந்தது சேவைத்துறைதான். வெளிநாடுகளுக்கு பல்வேறு சேவைகளைக் குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்தி இத்துறை வேகமாக வளர்ந்துள்ளது. இதற்கு ஒரு முக்கியக் காரணம், இந்தியாவில் உயர்கல்வி பெற்றவர்களில் கணிசமான அளவில் ஆங்கிலம் பேச, எழுதத் தெரிந்தவர்கள் இருப்பதே. உலகமயமாக்கல் சேவைத்துறையை வேகமாக வளரச் செய்த போதிலும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்த முடியவில்லை என்பதை இத்தொடரின் முந்தையக் கட்டுரையில் பார்த்தோம்.
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, தொழிற்துறை அளவிற்கு வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் சக்தி இத்துறைக்கு கிடையாது. இரண்டாவதாக, முறைசார்ந்த சேவைத்துறையில் நல்ல வேலை வேண்டும் என்றால் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும், கணினி பயன்படுத்தக்கூடிய ஆற்றலும் அவசியம். இவ்விரண்டும் உள்ள மக்கள்தொகையின் பங்கு இந்தியாவில் மிகக்குறைவு. பள்ளிக்கல்வியிலேயே இப்போதுதான் நாம் நூறு விழுக்காடு சேர்க்கையை நெருங்கியுள்ளோம். இந்தியாவில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் (drop-out rate), அதாவது, பள்ளிக்கல்வி முடிக்காமல் இடையிலேயே படிப்பை நிறுத்திவிடும் மாணவர்களின் பங்கு 30 விழுக்காடு. தலித் சமூகத்தில் இடைநிற்றல் விகிதம் 35 விழுக்காடாகவும், பழங்குடியினர் சமூகத்தில் இது 39 விழுக்காடாகவும் இருக்கிறது.
மேலும், வழங்கப்படும் கல்வியின் தரமும் வருந்தத்தக்கதாகவே உள்ளதை Pratham எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் வெளியிடும் Annual Status of Education Report தொடர்ந்து வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறது. பள்ளிக்கல்வி முடித்து மேற்படிப்புக்காக சேருபவர்களின் பங்கு 25 விழுக்காட்டுக்கும் குறைவு. கல்லூரிப்படிப்பை முடித்தவர்களுக்கு தரமான வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. 2015-இல் நாட்டில் மொத்த வேலையின்மை 5 விழுக்காடு; படித்தவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வேலையின்மை அதைவிட மூன்று மடங்காக 15 சதவீதம் என்கிற அவலநிலையே நாட்டில் நிலவி வருகிறது.
ஆக, உலகமயமாக்கல் என்பது தானாகவே மாயாஜாலம் செய்து அனைவரும் பயன்பெற வழி செய்யாது. உலகமயமாக்கல் என்பது ஒரு வாய்ப்பு. அந்த வாய்ப்பைப் பயன்படுத்த நாட்டு மக்களைத் தயார் செய்வது அரசாங்கத்தின் கடமை. அந்த வேலையையும் வேகமான பொருளாதார வளர்ச்சி சந்தை வழியே செய்துவிடும் என்று பொறுப்பைத் தட்டிக்கழிப்பது மிகவும் அறமற்ற செயல்.
கட்டற்ற உலகமயமாக்கல் ஏற்படுத்தியுள்ள எதிர்மறை விளைவுகளை எதிர்த்து, முன்னேறிய நாடுகளிலும் மக்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர். வெளிநாட்டுப் பொருட்களின் இறக்குமதிக்கு தடைபோடுவது, வெளிநாட்டவர்களின் வேலை நிமித்தமான குடியேற்றத்திற்கு தடைபோடுவது, உள்நாட்டு நிறுவனங்களில் உள்நாட்டவர்களுக்கே வேலை என்பவையெல்லாம் அந்தப் போராட்டங்களுக்கான அரசு தரப்பு எதிர்வினைகள்.
உலக சந்தையில் இது போன்ற மாற்றங்கள் நடக்கும் போது, உள்நாட்டு உற்பத்திக்கான கிராக்கியை உள்நாட்டிலேயே உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அந்த சமயத்தில் நெருக்கடி இல்லாமல் பொருளாதாரத்தை இயக்க வேண்டுமென்றால், மக்களிடம் போதிய வாங்கும்-சக்தி இருக்க வேண்டும். அதற்கு ஆயத்தமாவதே புத்திசாலித்தனம்.
[அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி-1](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/17)
[அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி – 2](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/48)
[அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி – 3](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/19)
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)
**
.
**
[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)
**
.
**
[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)
**
.
**
[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)
**
.
.�,”