அனைத்துக் கட்சிக் கூட்டம்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!

Published On:

| By Balaji

பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளைத் தடுப்பது குறித்து ஆலோசனை நடத்த, முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது.

சேலம் தளவாய்ப்பட்டி சிறுமி ராஜலட்சுமி பாலியல் வல்லுறவுக்குட்பட மறுத்து பெற்றோரிடம் சொல்லியதால், தினேஷ் என்பவனால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். புதுக்கோட்டையில் கஸ்தூரி என்னும் இளம்பெண், காதலனால் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் சிட்லிங் கிராமத்தில் 17 வயது பழங்குடியின மாணவி, கும்பல் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டார். உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மருத்துவமனையில் அவர் மரணமடைந்தார்.

இந்தச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திருச்சியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஏழு வயது சிறுமிக்கு அதிமுக பிரமுகரால் பாலியல் தொல்லை, தஞ்சை திருபுவனத்தில் 21 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு எனத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில் இதனைத் தடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாட்கள் மாநிலக் குழு கூட்டம் நேற்று (நவம்பர் 13) சென்னையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் துவங்கியது. மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஏழு மாற்றுத்திறனாளிப் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வல்லுறவுகளும், அதில் மூன்று கொலைக்குற்றங்களும் நடந்துள்ளன. இத்தகைய வன்முறைகளால் பாதிக்கப்பட்டு சோகத்தின் விளிம்பில் நிற்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். சமூகத்தில் காலம் காலமாக நிலவுகின்ற ஆண் மேலாதிக்கம், சாதி வெறி உள்ளிட்டு போதை பழக்கம் போன்ற காரணிகள் இவற்றுக்குப் பின்புலமாக இருக்கின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழக அரசோ முதல்வரோ, அதிர வைக்கும் இத்தகைய குற்றங்கள் குறித்து ஓர் அறிக்கை கூட வெளியிடுவதில்லை. அரசின் காவல் துறை, மருத்துவத் துறையின் இதயமற்ற அணுகுமுறைக்கும், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு இல்லாததற்கும் அரசு பொறுப்பேற்க வேண்டும்” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் அதிகரித்துக் கொண்டுவரும் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுத்திட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உடனடியாக தமிழக முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டுமெனவும், வன்முறையை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும், இந்த மிக முக்கியமான பிரச்சினை குறித்து விவாதிக்க சட்டமன்றத்தின் ஓர் அவசர சிறப்புக் கூட்டத்தையும் நடத்திட வேண்டுமெனவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share