மத்திய அரசு சொல்லும் அனைத்திற்கும் தலையாட்டுவது கிடையாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 29) சென்றார். செல்லும் வழியில் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், “மழை வெள்ளம் அதிகமாக வரும்போது அதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ஆங்காங்கே ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் அந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் வரும்போது வெள்ளத் தடுப்பை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு அந்த பணிகளும் நடைபெற்று வருகின்றன. மழை என்பது நாம் நினைத்ததுபோல வருவதில்லை. அதிக மழை பெய்யும்போது வெள்ளம் ஏற்படுவது இயற்கை. இதனை யாராலும் தடுக்க முடியாது. குறிப்பிட்ட அளவு நீரை வெளியேற்ற வடிகால் வசதி செய்துள்ளோம்” என்று தெரிவித்தார். குடிமராமத்து பணிகள், தடுப்பணைகள் குறித்தும் விளக்கினார்.
மத்திய அரசு சொல்வதைத்தான் நீங்கள் செய்கிறீர்கள் என்று உங்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “எதிர்க்கட்சிகள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். அவர்கள் இப்படித்தான் பேசப் போகிறார்கள், பிறகென்ன பாராட்டியா பேசுவார்கள். ஜெயலலிதாவைப் போல மத்திய அரசுடனான உறவை நாங்களும் பின்பற்றி வருகிறோம். எதை எதிர்ப்போமோ அதனை எதிர்ப்போம். மத்திய அரசு சொல்லும் அனைத்திற்கும் நாங்கள் தலையாட்டுவது கிடையாது. 14 ஆண்டுகள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்துவந்த திமுக என்ன திட்டத்தைக் கொண்டுவந்தது. காவிரி நதிநீர் பிரச்னையைக் கூட அவர்களால் தீர்க்க முடியவில்லை” என்று தெரிவித்தார்.
அதிமுக அரசை மத்திய பாஜக அரசு கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது என்று தொடர்ந்து விமர்சனம் செய்யப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசுடன் ஆட்சி ரீதியாகவும், மக்கள் நலத் திட்டங்களுக்காகவும் மட்டுமே இணக்கமாக இருந்துவருகிறோம் என்று ஆட்சியாளர்கள் விளக்கம் அளித்துவருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.�,