`அனுமன் ஜெயந்தி: வடை தயாரிக்கும் பணி!

Published On:

| By Balaji

�அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு டிசம்பர் 17ஆம் தேதி ஒரு லட்சத்து எட்டு வடை மலை சார்த்தப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

நாமக்கல்லில் 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆண்டுதோறும் மார்கழி மாத மூல நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். அதன்படி, இந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடைபெறவுள்ளது. அப்போது ஆஞ்சநேயருக்கு நேர்த்திக்கடனாக வடை மாலை சாற்றுவது வழக்கம்.

அதற்காக வடை தயாரிக்கும் பணி நேற்று முன்தினம் (டிசம்பர் 13) ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மடப்பள்ளியைச் சேர்ந்த ரமேஷ் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் 2250 கிலோ உளுந்த மாவு, 600 கிலோ நல்லெண்ணெய், 36 கிலோ மிளகு, 36 கிலோ சீரகம், 135 கிலோ உப்பு ஆகியவற்றைக்கொண்டு வடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அன்றைய தினம் அதிகாலை ஐந்து மணிக்கு ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகளால் செய்யப்பட்ட மாலை சார்த்தப்படும். சிறப்பு அலங்காரம் நடைபெறும். 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் ஒரு மணிக்கு மகா தீபாராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெறும். மாலை நான்கு மணிக்கு புதிய முத்தங்கி அலங்காரம் நடைபெறும். ஆஞ்சநேயருக்கு மாலையாக சார்த்தப்பட்ட ஒரு லட்சத்து எட்டு வடைகள் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

2016ஆம் ஆண்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 54,000 வடை மாலை சார்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel