ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியைத் திரும்பப் பெற்றுள்ளதாக தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இன்று (ஜூன் 12) அறிவித்துள்ளது.
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் காப்பர் உற்பத்தி செய்யும் ஸ்டெர்லைட் ஆலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுத்தன்மை கொண்ட புகை மற்றும் கசிவுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாக கடந்த மூன்று மாதங்களாகப் போராட்டம் நடைபெற்றது. மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
அதன்படி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்திருந்தார். ஆனால் கண்துடைப்புக்காகவே ஆலை மூடப்பட்டுள்ளதாக பல்வேறு கட்சியினரும் குற்றம் சாட்டிவந்தனர்.
இதற்கிடையே மீண்டும் ஆலையைத் திறக்கக் கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்தால், எங்கள் தரப்பு வாதம் இன்றி அனுமதி வழங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்திலும், பசுமைத் தீர்ப்பாயத்திலும் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்தது.
அதுபோன்று ஸ்டெர்லைட் ஆலையின் 2ஆவது அலகு விரிவாக்கப் பணிகளுக்கு அனுமதி பெற்றதை எதிர்த்தும், அனுமதி பெற்ற இடத்தில் தொடங்காமல் வேறு இடத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டுவருவதாகவும் கூறி வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆலை விரிவாக்கத்திற்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு 2016ஆம் ஆண்டு வழங்கிய அனுமதியை திரும்பப் பெறுவதாக தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவித்துள்ளது.�,