பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானியின் காந்திநகர் தொகுதியில் தற்போதைய பாஜக அகில இந்திய தலைவர் அமித் ஷா இன்று (மார்ச் 30) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். பாஜகவின் தலைவர் என்பதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய தலைவர்களோடு இன்று அகமதாபாத்தில் பொதுக்கூட்டம், பேரணி நடத்திவிட்டு வேட்பு மனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா .
வேட்புமனு தாக்கலுக்கு முன்பு நான்கு கிலோ மீட்டர் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தினார் அமித் ஷா. அதில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ராம் விலாஸ் பாஸ்வான், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் போன்ற தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் கலந்துகொண்டனர். ஆனால் காந்தி நகர் தொகுதியின் தற்போதைய மக்களவை உறுப்பினரான எல்.கே. அத்வானி கலந்துகொள்ளவில்லை.
வேட்பு மனு தாக்கலுக்கு முன்னதாக நடந்த கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “இந்த நாள் எனக்கு மிகப் பெரிய நாள். நான் இன்று காந்திநகர் தொகுதிக்கான வேட்பு மனுவோடு உங்கள் முன் நிற்கிறேன். நான் 1982 ஆம் ஆண்டு பூத் அளவிலான ஊழியராக பாஜகவில் எனது பணியைத் தொடங்கினேன். துண்டுப் பிரசுரம் விநியோகித்தேன், போஸ்டர்கள் ஒட்டினேன். இன்று பாஜக என்ற உலகின் மிகப் பெரியக் கட்சியின் தலைவராக உயர்ந்திருக்கிறேன். எனது இந்த பயணம் என்னைப் பொறுத்தவரையில் மிகச் சிறந்ததாகக் கருதுகிறேன்.
அத்வானி அவர்களின் தொகுதியில் நான் போட்டியிடுவது எனக்குக் கிடைத்த கௌரவம். நான் அவர்களால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்” என்று உரையாற்றிய அமித் ஷா,இன்று பிற்பகல் தனது மக்களவை வேட்பாளராக முதல் முறையாக வேட்பு மனுவை தாக்கல்செய்கிறார்.
ஏப்ரல் 4 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடக்கிறது. ஏப்ரல் 23 ஆம் தேதி குஜராத்தில் தேர்தல் நடக்கிறது.
�,