மதுரை, சென்னை உள்பட பல நகரங்களிலுள்ள காவல் நிலையங்களில் கொலை முயற்சி, ஆட்கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள ரவுடியான வரிச்சியூர் செல்வம், காஞ்சிபுரம் அத்திவரதரை ஜூலை 16 ஆம் தேதி விவிஐபி மரியாதையோடு தரிசித்தது சர்ச்சையாகியிருக்கிறது.
கடவுள் முன் யாவரும் சமம் என்றபோதும் குடியரசுத் தலைவர் அமர்ந்து அத்திவரதரை தரிசித்த அதே இடத்தில் வரிச்சியூர் செல்வமும் அமரவைக்கப்பட்டு அர்ச்சகர்களால் மரியாதை செலுத்தப்பட்டது அரசியல், போலீஸ் வட்டாரங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
30 வழக்குகளை சுமந்துகொண்டு என்கவுன்ட்டர் முயற்சிகளில் இருந்து தப்பித்து உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் வரிச்சியூர் செல்வம், நெஞ்சு முழுதும் தங்க நகைகளோடு ஆடம்பரமாக வந்து அதிகாரமாக அத்திவரதரை தரிசித்துச் சென்றது எப்படி?
போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்.
“அத்திவரதர் தரிசன விழாவுக்காக காஞ்சி நகர் மட்டுமல்ல காஞ்சி மாவட்டமே போலீசின் பாதுகாப்புப் பிடியில் இருக்கிறது. 6 எஸ்.பிக்கள், 2 டிஐஜிகள், ஒரு ஐஜி, 5 ஆயிரம் போலீஸார் காஞ்சி நகரம் முழுதும் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களைத் தாண்டிதான் வரிச்சியூர் செல்வம் அத்திவரதரை தரிசிக்கச் சென்றிருக்கிறார்.
காஞ்சி டவுனில் ஏராளமான போலீஸ் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் பல மாவட்ட போலீசாரும் ஷிப்டு முறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக தென் மாவட்ட போலீஸார் பலருக்கும் வரிச்சியூர் செல்வத்தைப் பார்த்தாலே அடையாளம் தெரியும். திமுக ஆட்சிக் காலத்தில் அழகிரிக்கும், பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி உள்ளிட்டோருக்கும் நெருக்கமாக இருந்த வரிச்சியூர் செல்வம் அதிமுகவிலும் தனக்கு நண்பர்களை வைத்திருந்தார்.
காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் பத்து பாஸ்கள் உண்டு. அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கூடுதல் பாஸ்கள் கொடுக்கப்படுகின்றன. எம்.எல்.ஏ.க்கள், கலெக்டர், போலீஸ் உயரதிகாரிகளுக்கு வேண்டப்பட்டவர்களுக்குதான் விவிஐபி பாஸ் கிடைக்கும் அந்த வகையில் வரிச்சியூர் செல்வத்துக்கு கலெக்டர் அலுவலகம் மூலமாகவே விவிஐபி பாஸ் வழங்கப்பட்டிருக்கிறது. வரிச்சியூர் செல்வம் என்று போடாமல் செல்வம் என்ற பெயரிலேயே பாஸ் கொடுத்திருக்கிறார்கள்.
காஞ்சிபுரம் கலெக்டராக இப்போது இருக்கும் பொன்னையா மதுரைக்காரர். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மிகவும் நெருக்கமானவர். எனவே மதுரை வட்டார தொடர்புகள் மூலமாகத்தான் வரிச்சியூர் செல்வத்துக்கு விவிஐபி பாஸ் கிடைத்திருக்கிறது. இதற்கு மேல் எப்படி சார் வெளிப்படையா சொல்வது?” என்று காதைக் கடித்தார்கள்.
எல்லாம் அந்த அத்திவரதருக்கே வெளிச்சம்!
**
மேலும் படிக்க
**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
�,”