அதிமுக வேட்பாளர்கள் யார்? நேர்காணல் தொடங்கியது!

Published On:

| By Balaji

மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தவர்களுக்கான நேர்காணல் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவைத் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. 534 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகம், புதுச்சேரியிலுள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.

தேர்தலுக்காக அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியில் பாஜக-5, பாமக-7, தேமுதிக-4, புதிய தமிழகம்-1, புதிய நீதிக் கட்சி-1, என்.ஆர்.காங்கிரஸ்-1 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் கூட்டணிக் கட்சிகள் 19 இடங்களிலும் அதிமுக 21 இடங்களிலும் போட்டியிடவுள்ளது. அதிமுக கூட்டணிக்கு தமாகா வரும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை மாறுபடும்.

இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (மார்ச் 11) அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் தொடங்கியது. விருப்ப மனு தாக்கல் செய்துள்ளவர்களிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் நேர்காணல் நடத்திவருகின்றனர். அப்போது தொகுதியின் வெற்றிவாய்ப்பு நிலவரம், கட்சிக்காக என்னென்ன பணிகளை மேற்கொண்டிருக்கிறீர்கள், தொகுதியில் நின்றால் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கும், வேட்பாளராக நிறுத்தப்பட்டால் நிர்வாகிகள் ஒத்துழைப்பு, கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு எவ்வாறு இருக்கும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

முதற்கட்டமாக சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, விழுப்புரம் ஆகிய 9 தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற்றுள்ளது. நாளையுடன் அதிமுக வேட்பாளர் நேர்காணல் முடியவுள்ள சூழலில், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட பிறகு அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share