வருகிற மக்களவைத் தேர்தலுக்கு என்று முதல்வர் எடப்பாடி பிரச்சாரம் செய்துகொண்டிருந்தாலும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கும் 18 தொகுதிகள் மீதுதான் அவருக்கு அதிக அக்கறை இருக்கிறது. பிரச்சாரம் முடிந்து ஒவ்வொரு நாளும் இரவு 18 சட்டமன்றத் தொகுதிகள் நிலவரத்தைத்தான் அவர் விசாரித்துத் தெரிந்துகொள்கிறார்.
இந்நிலையில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் மானாமதுரை, பரமக்குடி தொகுதிகளில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு செல்லும் தகவல்கள் அவருக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை என்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சிவங்கை அதிமுகவினர்,
“ மானாமதுரை, பரமக்குடி ஆகிய இரு சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அமமுகவை விட அதிமுகவின் பணி தொய்வாகத்தான் இருக்கிறது. மானாமதுரை அமமுக வேட்பாளரான தகுதி நீக்க எம்.எல்.ஏ., மாரியப்பன் கென்னடிக்கு அங்குள்ள அதிமுக நிர்வாகிகள் அனைவரும் அத்துப்படி. அதனால் அவரது வலையில் விழுந்துவிட்டனர். கணிசமான அதிமுக நிர்வாகிகள் சைலண்ட் ஆக இருந்துவிடுகிறார்கள். அமைச்சர் பாஸ்கரனும் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவோடு செல்லும் அளவுக்குக் கூட மானாமதுரை சட்டமன்ற வேட்பாளர் நாகராஜனோடு வருவதில்லை.
இதேபோலத்தான் ராமநாதபுரம் அமைச்சர் மணிகண்டனும் மக்களவை பாஜக வேட்பாளரான நயினாரோடுதான் அதிகம் போகிறார். இன்று (மார்ச் 30) பரமக்குடி நகரத்தில் காலை 7 மணிக்கே அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார். அமைச்சர் மணிகண்டனுக்கு முன்கூட்டியே சொல்லியும் அவர் தலைகாட்டவில்லை. அதனால், முன்னாள் சேர்மனும் மகளிரணி இணைச் செயலாளருமான கீர்த்திகா முனியசாமியோடு ஓட்டுவேட்டையை ஆரம்பித்தார் சதன் பிரபாகர். பரமக்குடி கிழக்கு நகரப் பகுதியில் ஆறேழு வார்டுகள் முடித்த பின்னர் பத்து மணிக்குமேல்தான் பரமக்குடிக்கு அமைச்சர் மணிகண்டன் வந்தார். அதுவும் பாஜக மக்களவை வேட்பாளரோடுதான் வந்தார். இப்படித்தான் இருக்கிறது அதிமுகவின் நிலைமை. முதல்வருக்கு தெரியப்படுத்திவிட்டோம் ” என்கிறார்கள்.
அமைச்சர்களின் இந்தப் புறக்கணிப்பை பற்றி அதிமுக வேட்பாளர்களும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்பதே கள நிஜம்.�,