தேர்தலுக்குப் பிறகு அதிமுக, திமுகவுக்கு தங்களைக் கண்டு பயம் வந்துவிட்டதாக அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் அமமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து கடந்த இரண்டு நாட்களாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அமமுக தேர்தல் பணிமனை இன்று (மே 3) திறந்துவைக்கப்பட்டது.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வனிடம், அமமுகவை சுயேச்சை என்றே அமைச்சர்கள் விமர்சித்துவருகிறார்களே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், “நாங்கள் சுயேச்சைகள்தானே, பிறகு ஏன் எங்கள் கொடி, கரைவேட்டி தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிடுகிறார்கள். சின்னம் வாங்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சுயேச்சையான எங்களைக் கண்டு அதிமுக ஏன் இவ்வளவு பயப்படுகிறது. வாக்குப் பதிவுக்குப் பிறகு அதிமுக, திமுக இரண்டுக்குமே எங்களைக் கண்டு பயம் வந்துவிட்டது. தேர்தல் முடிவில் நாங்கள்தான் மிகப்பெரிய வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடு செய்ய முடியாது என்று குறிப்பிட்ட தங்க தமிழ்ச்செல்வன், “பன்னீர்செல்வம் சந்தர்ப்பவாத அரசியல் செய்பவர். யார் வெற்றிபெறுவார்களோ அவர்கள் பக்கம் கூனிக் குறுகி நின்று பதவி வாங்குவார். அவருக்கு கொள்கை கோட்பாடெல்லாம் கிடையாது. இன்றைக்கும் ஆணித்தரமாக சொல்கிறேன். தேர்தலுக்குப் பிறகு அவர் நிச்சயம் பாஜகவுக்குச் செல்வார். எனக்குப் பதில் சொல்லமாட்டேன் என்றுவிட்டு கடந்த ஒருவாரமாக எனக்கு மட்டும்தான் பதில் சொல்லிவருகிறார்” என்றும் விமர்சித்தார்.�,