அதிமுக அணையும் விளக்கல்ல, ஐந்து ஆண்டுகள் உத்தரவாதம் உள்ள எல்.இ.டி. பல்ப் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
“ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச. உள்ளிட்ட பத்து போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்கள் நேற்று போராட்டம் நடத்தினர். கோட்டையை நோக்கி பேரணி செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் ,” அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்களை போராட்டக் களத்திற்கு விரட்டி அடிக்காமல், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உடனடியாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் . அரசு ஊழியர்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறையும், அராஜகமும் “அணையப் போகும்” தீபத்தின் கடைசி அடையாளங்கள் என்பதை, எந்த நேரத்திலும் விரட்டியடிக்கப்பட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டிய அதிமுக அரசினை தாறுமாறாக வழி நடத்தும் முதல்வர் பழனிசாமி உணர வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், கரூர் புதுகுறுக்குப்பாளையத்தில் இன்று(அக்டோபர் 5) செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, “அதிமுக அணையப்போகும் தீபம் கிடையாது. இன்று எல்.இ.டி. விளக்குகள் வந்துவிட்டன. 5 ஆண்டுகள் உத்திரவாதமாக சுடர்விடப்போகும் எல்இடி பல்பு. ஐந்து ஆண்டுகள் முழுமையாக இந்த ஆட்சி நடைபெறும்” என்று தெரிவித்தார்.
மேலும், பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது. ரூ.10 குறைத்திருக்க வேண்டும்.கலால் வரி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. மாநில அரசு நிதிப் பற்றாக்குறையாக செயல்படுகிறது. ஜிஎஸ்டிக்கு பிறகு நிதி கட்டுப்பாடு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்று விட்டது” என்று குறிப்பிட்டார்.�,