சிறையில் இருந்து விடுதலையானவுடன் சசிகலா அதிமுகவுடன் ஐக்கியமாவார் என்றும், அடுத்த சட்டமன்றத் தேர்தலை ஒருங்கிணைந்த அதிமுகவாக சந்திப்பார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன. அதற்கேற்ற மாதிரியே கடந்த ஒரு மாதமாகவே அரசியல் நகர்வுகள் அரங்கேறி வந்தன.
தினகரன் அதிமுக எதிர்ப்பையும், பாஜக எதிர்ப்பையும் வெகுவாக குறைத்துக் கொண்டார். அதேபோல முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கூட தினகரனைப் பெரிதாக விமர்சிப்பதில்லை.
ஆனால், இன்று (அக்டோபர் 3) வெளியான அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மா- நாளிதழில், ‘சத்தியத்துக் கோட்டையும் சாத்தான்கள் நோட்டமும்’ என்ற தலைப்பில் சித்திரகுப்தன் பெயரில் அதன் ஆசிரியர் மருது அழகுராஜ் எழுதிய கவிதை வெளியாகியுள்ளது.
இதில் சசிகலா, தினகரனை முழுக்க முழுக்க சாடி, “சுத்திகரித்த கங்கையாக சூதகமில்லா மங்கையாக தொண்டர்கள் கூடி நடத்துகிற தூயநதிச் சொரூபமாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் இணைகரத்தால் இரண்டாயிரத்து இருபத்து ஒன்று நோக்கி பீடு நடைபோடுகிற சத்தியத்தின் கோட்டைக்குள் அந்த சாத்தான்கள் ஒருநாளும் சரசமாட முடியாது. இது சத்தியம் சத்தியம் சத்தியம்” என்று அழுத்தமான வரிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து அதிமுகவின் தலைமை வட்டாரங்களில் பேசினோம்.
“ அம்மா இறந்த பிறகு வேறு வழி தெரியாமல் அப்போதைக்கு உணர்ச்சிவசப்பட்டு சசிகலா பின்னால் அணி திரண்டோம். சாவு வீட்டில் எடுத்த முடிவு சரியாக இருக்காது என்று சொல்வார்கள். அது அதிமுக விஷயத்தில் நிஜமாகிப் போனது. அதனால்தான் இனி சசிகலாவே வேண்டாம் என்று ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவைத்தாகிவிட்டது.
ஆனால் சில ஊடகங்களின் துணையோடு சசிகலா வெளியே வருவார், தினகரன் முதல்வர் ஆவார் என்றெல்லாம் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதற்கு முடிவுகட்ட வேண்டுமென்றுதான் எடப்பாடியும், பன்னீரும் இணைந்து பேசி இப்படி ஒரு அறிவிப்புப் பிரகடனத்தை கவிதை மூலமாக வெளியிட வைத்திருக்கின்றனர். இனி பழையபடி சசிகலா எதிர்ப்பு, தினகரன் எதிர்ப்பை அமைச்சர்கள் மேற்கொள்வார்கள்” என்று கூறுகிறார்கள்.
�,”