அதிமுகவில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குப் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதிலிருந்து அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் பொறுப்பில் இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.சின்னசாமி. கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவரை பதவியிலிருந்து நீக்கி பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் உத்தரவிட்டனர். மேலும், தொழிற்சங்கப் பணிகளைக் கவனிக்க யு.ஆர்.கிருஷ்ணன், தாடி ம.ராசு, கா.சங்கரதாஸ் ஆகியோர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. தொழிற்சங்கத்தின் கன்வீனராக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் அண்ணா தொழிற்சங்கப் பேரவையைக் கவனிக்க அமைக்கப்பட்ட குழு கலைக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று (ஜனவரி 29) அறிவிப்பு வெளியிட்டனர். மேலும் அதில், “அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் பொறுப்பில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நியமிக்கப்படுகிறார். அதுபோலவே, தொழிற்சங்கத்தின் தலைவராக தாடி.ம.ராசு செயல்படுவார். இவர்களுக்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்கனவே போக்குவரத்துத் துறை அமைச்சர், கரூர் மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும், கூடுதலாகத் தொழிற்சங்கச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. அண்ணா தொழிற்சங்கத்தில் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் அதிகம் இருப்பதால் விஜயபாஸ்கருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது.�,”