டெல்லியின் சொல்படியே அதிமுக செயல்படுவதாக விமர்சித்துள்ள தினகரன், அதிமுகவின் நிழல் பொதுச் செயலாளராக குருமூர்த்தி உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
தூர்வாரும் பணி என்ற பெயரில் நடைபெறும் தமிழக அரசின் முறைகேடுகளைக் கண்டித்து அம்மா முன்னேற்ற மக்கள் கழகம் சார்பில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் நேற்று (செப்டம்பர் 2) கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தினகரன், “கடலில் வீணாகக் கலக்கும் நீரைப் பாதுகாக்க இந்த அரசு தவறிவிட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை தற்போதும் கம்பீரமாக உள்ளது. ஆனால், விவசாயியின் மகன் என்று கூறிக்கொள்ளும் முதல்வர் பழனிசாமி, அந்த அணையின் மேலணை மதகுகள் கூட உடைவதைக் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.
மணல் கொள்ளையால்தான் முக்கொம்பு அணை மதகுகள் உடைந்தன. தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ வேண்டும் என்று ஆட்சியாளர்கள் தமிழகத்தைச் சுரண்டிக்கொண்டு இருக்கிறார்கள். தீட்டும் திட்டத்தில் ஊழல் செய்வதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், ஊழல் செய்ய வேண்டும் என்பதற்காகவே போடப்பட்ட ஒரு திட்டத்தை இப்போதுதான் பார்க்கிறோம். எங்குமே தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை. மக்களின் வரிப்பணத்தைத்தான் தூர்வாரி உள்ளனர்.
18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் எந்த நேரத்திலும் தீர்ப்பு வரும். அதைத் தொடர்ந்து, மக்கள் விரும்பாத இந்த ஆட்சி முடிவுக்கு வரும். விரைவில் அமையவிருக்கும் அமமுக ஆட்சியில், தமிழக நதிகளை இணைப்போம், கால்வாய்களை, ஏரிகளைத் தூர்வாருவோம். மக்களுக்காகச் செயல்பட வேண்டும், திட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்ற தொலைநோக்கு எண்ணம் இல்லாத அரசாகத் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
வழக்குகளைக் கண்டு பயந்து போயுள்ள அமைச்சர்கள், ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்கின்றனர். எங்கள் தொண்டர்கள் சில்லறைகள்தான். உங்களைப் போல் மூட்டை மூட்டையாக பணம் கைப்பற்றப்படும் தொண்டர்கள் எங்களிடம் இல்லை.
தினகரன் தியாகியா என்று பன்னீர்செல்வம் கேட்கிறார். நான் தியாகி அல்ல. ஆனால், நீங்கள் துரோகி என்பது தமிழகத்துக்கே தெரியும். 87இல் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவுக்கு எதிரான ஜானகி அணியில் போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு வாக்கு சேகரித்தவர் பன்னீர்செல்வம்.
அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவி பாஜகவுக்காக வைக்கப்பட்டுள்ளது. குருமூர்த்திதான் அதிமுகவின் நிழல் பொதுச் செயலாளர். டெல்லியின் உத்தரவில்தான் இந்த ஆட்சி நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
பன்னீர்செல்வம் தற்போது தனிமரமாக உள்ளார். நான் மிரட்டி கையெழுத்து வாங்கியதாக பன்னீர்செல்வம் கூறுகிறார். அப்படியென்றால், என்னைப் பார்த்தால் பயம் இருக்கிறதுதானே. அதனால்தான், இவர்களைத் தைரியமில்லாதவர்கள் என்று குருமூர்த்தியே சொல்லியுள்ளார்.
திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் இவர்களைப் பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.�,