தமிழகத்தில் அதிமுகவின் ஓராண்டுகால ஆட்சி வேதனைகள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. அனைத்துத் துறைகளிலும் அதிமுக அரசு கண்டுள்ள தோல்வியை மூடி மறைக்க, நாளேடுகளில் பகட்டான விளம்பரங்களைக் கொடுத்துள்ளது. உதாரணமாக, போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பல வருடங்களாக சுமார் 7 ஆயிரம் கோடி பாக்கிவைத்துவிட்டு, தொழிலாளர்களின் போராட்டத்திற்குப் பிறகு அதில் ஒரு பகுதியைத் திருப்பிச் செலுத்தியதைச் சாதனையாக விளம்பரப்படுத்தியிருப்பது வேடிக்கையாக உள்ளது. செல்வி ஜெயலலிதாவின் உடல்நிலை, பிறகு அவரது மரணம், அதன் பிறகு அக்கட்சிக்குள் ஏற்பட்ட அதிகாரப்போட்டி ஆகியவற்றால் பெரும்பாலான காலம் செயல்படாத அரசாகவே இருந்துள்ளது.
கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மாநிலத்தின் பல பகுதிகளில் ஒரு குடம் தண்ணீர் 5 முதல் 10 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சில இடங்களில் அதற்கும் தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரையும் சேர்த்து ஒரு கோடி பேருக்கு வேலை இல்லை. உலக முதலீட்டாளர் மாநாடு, தொலைநோக்கு திட்டம் 2023 என்றெல்லாம் கூறிவிட்டு ஒரு தொழிற்சாலை கூட தொடங்கவில்லை.
மாநிலத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பெண்கள் மற்றும் தலித் மக்கள் மீதான வன்முறை இன்னும் தொடர்கின்றன. ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் மக்கள் மீது காவல்துறையை மாநில அரசு ஏவி விடுகிறது. ஜனநாயக இயக்கங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சென்னை பள்ளிக்கரணை, மதுரை காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல், மதுக்கடைகளுக்கு எதிராக போராடி வரும் பெண்கள் மீது காவல்துறை அத்துமீறியும், அநாகரிகமாகவும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மூடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு அருகிலுள்ள 3000 த்திற்கு மேற்பட்ட கடைகளை மக்கள் வசிக்கும் பகுதிகளில் திறப்பதன் மூலம் படிப்படியான மதுவிலக்கு என்ற தனது கொள்கைகளிலிருந்து அதிமுக அரசு விலகிச் செல்கிறது.
கிரானைட் கொள்ளை சம்பந்தமாக சகாயம் ஐ.ஏ.எஸ். நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 20 ஆண்டுகளில் ரூ. 1 லட்சத்து 6 ஆயிரம் கோடிக்கு மேலாக அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதேபோன்று தாதுமணல் கொள்ளை சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகத்தின் நிர்வாகம் எத்தனை சீர்கெட்ட நிலையில் இருக்கிறது என்பதற்கு போக்குவரத்துத்துறை நல்ல உதாரணம். ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள், ஓய்வூதியம் கொடுக்கப்படவில்லை என்பதோடு தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்து இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் கட்டவேண்டிய தொகையை கூட போக்குவரத்து நிர்வாகங்கள் அரசின் வழிகாட்டுதலின் படியே, தங்களின் அன்றாடச் செலவுகளுக்கு கபளீகரம் செய்தன.
பள்ளிக்கல்வித்துறையில் வரவேற்கத்தக்க சில சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும், உயர்கல்வி மற்றும் பொறியியல், மருத்துவ கல்லூரிகளில் தனியார் கொள்ளை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவற்றில் எல்லாம் இந்த அரசு கண்டுகொள்ளாமல் காலம் கடத்துகிறது. ஆளுங்கட்சியில் ஏற்பட்ட பிளவை மத்தியில் ஆளும் பாஜக பயன்படுத்தி அச்சுறுத்தி இரண்டு கோஷ்டிகளையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முயற்சிக்கிறது.
தமிழக மக்கள் துயரங்களில் தவித்துக் கொண்டிருக்கும்போது, அதிமுகவின் இரு அணிகளும், ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களை பாதுகாக்கவும், அரசு நிர்வாகத்தை ஊழல் சாம்ராஜ்யமாக நடத்துவதற்கும் போட்டியில் ஈடுபட்டுள்ளதுதான் கடந்த ஓராண்டில் நாம் கண்டுவருவது. மொத்தத்தில் அதிமுகவின் ஓராண்டு ஆட்சி மாநில மக்களுக்கு வேதனையிலும் வேதனையே” என்று அவர் தெரிவித்துள்ளார்.�,