அதிபர் ஆட்சி முறையை நோக்கி இந்தியா: எச்சரிக்கும் சுயாட்சி மாநாடு!

Published On:

| By Balaji

‘மத்திய அரசின் அதிகாரக் குவிப்பைத் தகர்த்திடுவோம், மாநில உரிமைகள் பறிப்பைத் தடுத்திடுவோம்’ என்ற முழக்கத்துடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில சுயாட்சி மாநாடு சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று (செப்டம்பர் 21) நடைபெற்றது.

விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் வரவேற்புரையாற்ற, ரவிக்குமார் நோக்கவுரையாற்றினார். விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திமுக செயல்தலைவர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுவை முதல்வர் நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன், மமக தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் அனிதா மற்றும் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் உள்ளிட்டவர்களுக்கு வீர வணக்கம். மாநில சுயாட்சியை வென்றெடுக்க வேண்டும். மத்திய, மாநில உறவுகளை ஆய்வு செய்ய ஆணையம் வேண்டும். கல்வித் தொடர்பான அதிகாரங்களை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும். இந்தியாவில் அதிபர் ஆட்சியை திணிக்கும் முயற்சியை கைவிட வேண்டும். மாநிலங்களுக்கு பொருளாதார தற்சார்பு நிலையை உருவாக்க வேண்டும். சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவதை கைவிட வேண்டும். நிதி நிர்வாக அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். மாநிலங்களுக்குச் சமமான பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். இந்தி, சமஸ்கிருத திணிப்பை கைவிட்டு தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை விசிக தலைவர் திருமாவளவன் மேடையில் வாசித்தார்.

கூட்டத்தில் தொடக்கவுரையாற்றிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “இந்தியா கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையிலான நாடு. விடுதலை பெற்றது முதலே மாநிலங்களின் சுயாட்சி குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. நாம் தற்போது கூட்டாட்சி தத்துவம் குறித்து பேசினாலும், ஒற்றைக் குவிப்பு ஆட்சி முறைதான் மத்தியில் தற்போது நடந்து வருகிறது. ஒரே இடத்தில் அதிகாரத்தைக் குவிப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. இவை அனைத்தும் ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்பாடுகளாகும். கூட்டாட்சி தத்துவம், ஜனநாயக முறைகள் பாதுகாக்க நமது குரலை உயர்த்த வேண்டும். தற்போது ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவார் அமைப்புகளால் கூட்டாட்சி தத்துவம் சிதைக்கப்படுகிறது. கூட்டாட்சி தத்துவங்களை வலுப்படுத்தக்கூடிய வகையில் நம் போராட்டங்கள் அமைய வேண்டும்” என்று பேசினார்.

தலைமையுரையாற்றிய திருமாவளவன், “மத்திய – மாநில அரசுகளின் உறவை ஆய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தவர் கலைஞர் கருணாநிதி. மத்திய ஆட்சியில் உள்ள மோடி அரசு விரும்புவது டிஜிட்டல் இந்தியா. நாம் விரும்புவது கூட்டாட்சி இந்தியா. அவர்கள் விரும்புவது இந்துத்துவ இந்தியா. நாம் விரும்புவது சமத்துவ இந்தியா. இதுதான் அவர்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு.

அவர்கள் ஒற்றை ஆட்சியை நிலைநாட்டப் பார்க்கிறார்கள். நாம் கூட்டாட்சியை நிறுவப் பார்க்கிறோம். மத்தியில் கூட்டாட்சி நிறுவ வேண்டுமென்றால் மாநிலத்தில் சுயாட்சி வேண்டும். அவர்களின் இந்தியா முழுவதும் இந்தி பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால்தான் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வருகின்றன. பன்னாட்டு நிறுவனங்களில் ஏஜெண்டாகவே மோடி அரசு செயல்படுகிறது. மாநிலத்தில் திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என்பதே மத்தியில் உள்ளவர்களின் எண்ணமாக உள்ளது. சாதிய, மதவாத சக்திகள் ஒருபோதும் திமுக ஆட்சிக்கு வருவதை விரும்ப மாட்டார்கள்.

சாதிய, மதவாத கட்சிகள் ஒருபோதும் வலுப்பெறக் கூடாது. அதற்கு திமுக வலிமையாக இருக்க வேண்டும். தோழமை கட்சிகள் வலிமையாக இருக்க வேண்டும். இதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். அந்த நோக்கில்தான் இந்த உறவே தவிர, நான்கைந்து இடங்களுக்காகவோ, பதவிகளுக்காகவோ அல்ல. தேர்தலைப் பற்றி கவலைப்படாமல் போராடிக்கொண்டிருக்கும் ஒரு கட்சிதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. தேர்தலில் சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பு வந்தால் மகிழ்வுடன் பயணிப்போம். இல்லையெனில், இன்னும் மகிழ்வுடன் போராடுவோம். சுயாட்சியை வென்றெடுக்க திமுகவுக்கும், ஸ்டாலினுக்கு முக்கிய பங்குள்ளது. மாநில சுயாட்சியை வென்றெடுப்பதன் மூலம்தான் கூட்டாட்சி தத்துவத்தை வெல்ல முடியும்” என்று பேசினார்.

மாநாட்டில் இறுதியாக நிறைவுரையாற்றிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், “மற்ற தலைவர்கள் சீக்கிரம் உறங்கிவிட அண்ணல் அம்பேத்கர் மட்டும் இரவு நெடுநேரம் விழித்திருப்பாராம். அவரிடம் ஒருவர், ‘மற்ற தலைவர்களெல்லாம் சீக்கிரம் உறங்க நீங்கள் மட்டும் ஏன் விழித்துக் கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டுள்ளார். அதற்கு அம்பேத்கர், ‘மற்ற தலைவர்களின் சமுதாயம் விழித்துக்கொண்டுள்ளது. ஆனால், என்னுடைய சமுதாயம் இன்னும் விழிப்படையவில்லை. எனவே நான் விழித்துக்கொண்டுள்ளேன்’ என்று கூறினாராம். அம்பேத்கர் தற்போது உயிருடனிருந்திருந்தால் திருமாவளவன் இருக்கிறார், அவர் பார்த்துக்கொள்வார் என்று உறங்கச் சென்றிருப்பார்” என்று திருமாவளவனைப் புகழ்ந்தார்.

“தற்போது சுயாட்சி வேண்டும் என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டுள்ளோம். முதன்முதலில் மாநில அரசைக் கலைக்கக்கூடிய 356ஆவது சட்டப்பிரிவு பயன்படுத்தப்பட்டு ஆட்சி கலைக்கப்பட்டது கேரளாவில் இ.எம்.எஸ்.நம்பூதிரி பட் தலைமையிலான அரசுதான். அதே மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் இங்கு சிறப்புரை ஆற்றியுள்ளார்.

இதே சட்டப்பிரிவை பயன்படுத்தி கலைஞர் தலைமையிலான ஆட்சியும் இரண்டு முறை கலைக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில உறவுகளை ஆய்வு செய்ய கலைஞர் ராஜமன்னார் கமிட்டியை அமைத்தார்.

தலைமை செயலகத்தில் எங்காவது குடிநீர் குழாயை சரிசெய்ய வேண்டுமென்றாலும், மத்திய அரசிடம் அனுமதி வாங்கித்தான் அதை சரி செய்ய வேண்டியதாக உள்ளது. . தலைமை செயலகத்தைச் சுற்றியுள்ள புற்களைப் பிடுங்குவதற்குக்கூட மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டிய கட்டாயம் மாநில அரசுக்கு உள்ளது.

தற்போது மாநில சுயாட்சிக்கான தேவை ஏற்பட்டுள்ளது. காரணம் மத்தியில் ஆட்சியிலுள்ள பாஜகவின் நிலைப்பாடுகள், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவால் எடுத்துவைக்கப்பட்ட உறுதிமொழிகள் என்ன? ஆனால், மோடி பதவியேற்ற பிறகு மாநிலச் சட்டமன்றங்களை மதிக்க தவறிவிட்டார். மாநில முதல்வர்கள் எல்லாம் தலையாட்டி பொம்மையாக இருக்க வேண்டும். அதிகாரங்கள் அனைத்தும் தன்னிடம் இருக்க வேண்டும் என்று நினைத்துவிட்டார்.

கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து மத்தியப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வு என்று இடஒதுக்கீடுகளுக்கு வேட்டு வைக்கும் ஒரு செயலை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதன் விளைவுதான் அரியலூர் மாணவி அனிதாவின் மரணம். 1,176 மதிப்பெண் பெற்றுள்ள அனிதா டாக்டர் படிப்பில் சேர முடியவில்லை. சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேர்ந்து இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றினோம். ஆனால், அந்த மசோதா டெல்லியில் உறங்கிக் கொண்டுள்ளது.

பொது விநியோக மானியங்கள் ரத்து, சர்க்கரை மானியம் கிடையாது, உதய் திட்டத்தின் மின் கட்டணம் விஷம் போல ஏறுகிறது. அரிசி மானியம் ரத்து என்று ஒவ்வொன்றாகக் கொண்டுவந்துள்ளனர்.

மாவட்ட நீதிபதிகளின் தேர்வுக்கும் அகில இந்திய நீட் தேர்வு கொண்டு வரும் வேலைகளில் இறங்கியுள்ளனர். மாநிலங்களில் மத்திய அரசு நிர்ணயிக்கும் தகுதியின் அடிப்படையில் வேலைக்கு வர வேண்டிய ஒரு நிலை மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகள் அனைத்தையும் மத்திய அரசு ஒரு நகராட்சி போல நடத்துவதில் ஆர்வம்காட்டுகிறது. புதிய கல்விக் கொள்கை எந்தப் பாடத்திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும், எந்த ஆசிரியரை நியமிக்க வேண்டும், எந்தப் பள்ளிகளை நடத்த வேண்டும், எதை மூட வேண்டும் என்று முடிவு செய்ய முயல்கிறார்கள் என்றால் நமக்கு ட்யூஷன் எடுக்க முயல்கிறார்களா என்ன?

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை இருந்து வருகிறது. ஆனால் மூன்றாவதாக ஒரு மொழியாக இந்தியைச் சாலை வழியாக கொண்டு வருகிறார்கள். நவோதயா பள்ளிகள் மூலம் இந்தி வாரம் கொண்டாட திட்டமிடுகிறார்கள். நம் குழந்தைகள் கல்வி கற்பதை முடிவு செய்ய வேண்டியது மாநில அரசுதானே தவிர, மத்திய அரசு இல்லை. மத்தியில் உள்ள பலத்தால் மாநிலங்களை அவர்கள் மதிக்காத ஒரு நிலை இருக்கலாம். அப்படி மதிக்காத காரணத்தால் வீழ்ந்த வரலாறுகள் பல உண்டு.

தற்போது தமிழகத்தில் கமிஷனும், காவியும் கைகோத்து வந்துள்ளது. தமிழகத்திலுள்ள ஆட்சி நிமிர்ந்து நிற்க முடியாத ஆட்சியாக, சுயமரியாதையற்ற ஆட்சியாக உள்ளது. கொள்ளையடிப்பதற்காகத் தன்மானத்தை அடகுவைத்த ஓர் ஆட்சி இங்குள்ளது. பதவி சுகத்தை அனுபவிக்க ஜனநாயகத்தைப் படுகுழியில் தள்ளியுள்ள ஆட்சி, மாநில உரிமைகளை அடகுவைத்து பதவிப் பிச்சை எடுக்கின்ற அடிமை ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. ஆட்சியை வெளியேற்றம் செய்திட வேண்டும். விரட்டியடிக்க வேண்டும். அதே நேரத்தில் மாநில சுயாட்சிக்கு நாம் தொடர்ந்து குரல் கொடுத்திட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share