[அதிக வருவாய்: 2ஆவது இடத்தில் திமுக!

Published On:

| By Balaji

இந்தியா முழுவதும் உள்ள மாநிலக் கட்சிகளில் 2017-18ஆம் ஆண்டில் அதிக வருவாய் ஈட்டிய 2ஆவது பெரிய கட்சியாக திமுக உள்ளது ஆய்வொன்றின் மூலம் தெரியவந்திருக்கிறது.

தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும், ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் என்ற அரசு சாரா அமைப்பு, அரசியல் கட்சிகளின் வரவு – செலவு கணக்குகள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை மார்ச் 7ஆம் தேதி வெளியிட்டது. அதில் இந்தியாவில் உள்ள மாநிலக் கட்சிகளிலேயே உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சிதான் 2017-18ஆண்டில் அதிக வருவாய் ஈட்டிய கட்சி என்று தெரிவித்துள்ளது. சமாஜ்வாதி கட்சியைத் தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுக உள்ளது.

வருமான வரித்துறை மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் ஆகியவற்றிற்கு அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கைகளின் அடிப்படையில், நாடு முழுவதும் 37 மாநிலக் கட்சிகளின் நிதி விவரங்களை ஏ.டி.ஆர் கண்டறிந்துள்ளது. 2017-18ஆம் ஆண்டில் அதிகப்படியாக ரூ.47.19 கோடி வருவாயுடன் சமாஜ்வாதி கட்சி முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக திமுக ரூ.35.748 கோடி வருவாயுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. தெலங்கானாவின், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி ரூ.27.27 கோடியுடன் 3ஆவது இடத்தில் உள்ளது. இந்த மூன்று கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.110.21 கோடியாகும். அதாவது 37 மாநிலக் கட்சிகளின் மொத்த வருவாயில் 46.45 சதவிகிதமாகும்.

திமுக 2017-18ஆம் ஆண்டில் ஈட்டிய வருவாயில் ரூ.27.47 கோடி செலவு செய்துள்ளதாகவும், 23.16 சதவிகிதம் செலவு செய்யப்படாமல் மீதமிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதுபோல ஆளும் கட்சியான அதிமுக ரூ.12.726 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகவும், அதில் ரூ.10.53 கோடி செலவு செய்துள்ளதாகவும், 17 சதவிகிதம் செலவு செய்யாமல் மீதமிருப்பதாகவும் அறிக்கை சமர்ப்பித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. பாமக ரூ.1.173 கோடி வருவாயில், ரூ.1.219 கோடி செலவு செய்திருப்பதாகவும், தேமுதிக ரூ.87.8 லட்சம் வருவாயில், 46.6 லட்சத்தை செலவு செய்திருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. நன்கொடை, சந்தா, வட்டி வருவாய் ஆகியவற்றின் மூலம் அரசியல் கட்சிகள் வருவாய் ஈட்டியிருப்பது தெரியவந்துள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share