செவிலியர் ஒருவரின் அதிகார துஷ்பிரயோகத்தினால், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையைச் சேர்ந்த மூத்த செவிலியர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து இணை இயக்குநர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 152 செவிலியர்கள் மூன்று ஷிப்டாக பணி செய்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் பணிக்காலத்தை முடிவு செய்யும் அதிகாரம் உடையவர் செவிலியர் கண்காணிப்பாளர் பத்மா. அம்மருத்துவமனை வட்டாரத்தில், இவரை 10மா என்று அழைக்கின்றனர். தனது ஆதரவாளர்களுக்குப் பணிகள் குறைவாக இருக்கும் வார்டுகளை ஒதுக்குவது, கேட்கும் நேரத்தில் விடுப்பு கொடுப்பது, வருகைப் பதிவேட்டில் கையெழுத்தை மாற்றிப்போடுவது என்று இவர் இருந்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பு, மூன்று எழுத்துப் பெயர் கொண்ட செவிலியர் ஒருவரது கையெழுத்தை வேறொரு செவிலியரைக் கொண்டு நிரப்பியதாகப் புகார் எழுந்தது. அதே நேரத்தில், இவர் தனக்குப் பிடிக்காதவர்களைப் பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதும் உண்டு என்று கூறப்படுகிறது.
பணிச் சுமை அதிகமுள்ள வார்டுகளில் ஒருவருக்கே அதிகளவில் டியூட்டி போடுவது, விடுப்பு கொடுக்காமல் மனரீதியாக வாட்டுவது என்று தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வந்துள்ளார் பத்மா. சமீபத்தில் செவிலியர் ஒருவர் பத்மாவைச் சந்தித்து, தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இரவுப் பணிக்கு வரமுடியாது என்று கெஞ்சியிருக்கிறார். “நைட் டூட்டியை மாற்ற முடியாது; வேண்டுமென்றால், உனது வீட்டுக்காரருக்கு வேறு ஒரு ஆளை ஏற்பாடு செய்துட்டு வா” என்று அவரிடம் கூறியுள்ளார்.
கடந்த நவம்பர் 20ஆம் தேதி காலை 7.00 மணிக்கு, மருத்துவமனைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளார் மூத்த செவிலியரான எலிசபெத் ராணி. அவரது கையெழுத்து மீது ஒயிட்னர் வைத்து அழித்துவிட்டு, வேறொரு செவிலியரை அந்த இடத்தில் கையெழுத்திடக் கூறியுள்ளார் பத்மா. இதன் மூலமாகத் தன்னைப் பழிவாங்க முயற்சித்ததை அறிந்து, எலிசபெத் ராணி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அருகில் இருந்த சக செவிலியர்கள் அவருக்கு ஆறுதல் கூறி, இது பற்றி மாவட்ட அரசு மருத்துவமனை இணை இயக்குநரிடம் புகார் கொடுக்குமாறு கூறியுள்ளனர்.
மின்னம்பலம் சார்பில் எலிசபெத் ராணியிடம் பேசினோம்.
“நான் எப்போதும் சரியான நேரத்துக்குச் சென்றுவிடுவேன். சில நிமிடங்களுக்கு முன்பே பதிவேட்டில் கையெழுத்து போடுவேன். அது போலவே, நவம்பர் 20ஆம் தேதி வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு வார்டுக்கு வந்தேன். நான் போட்ட கையெழுத்தை வொயிட்னர் வைத்து மறைத்துவிட்டு, வேறு ஒரு செவிலியரைக் கையெழுத்து போடச் சொல்லியிருக்கிறார் பத்மா. அதன் பிறகு, ஏன் வருகை பதிவேட்டில் கையெழுத்து போடவில்லை என்று என்னிடம் மிரட்டலாகக் கேட்டார். அதைக் கேட்டதும் நான் அதிர்ச்சியடைந்தேன். ஓடிப்போய் பதிவேட்டைப் பார்த்தபோதுதான், நான் போட்ட கையெழுத்தை அழித்தது தெரிய வந்தது.
இணை இயக்குநர் அலுவலகத்தில், செவிலியர் கண்காணிப்பாளர் பத்மா மீது புகார் கொடுத்தேன். இன்று (நவம்பர் 22), இது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. சிசிடிவி கேமராவைப் பரிசோதித்த அதிகாரிகள், நான் கையெழுத்து போடுவதைக் கண்டுள்ளனர். விசாரணையில், நடந்த அனைத்தையும் கூறினேன். அதன்பிறகு பத்மாவை அழைத்து விசாரித்தனர். இன்னும் ரிசல்ட் தெரியவில்லை” என்றார் எலிசபெத் ராணி.
மாவட்ட அரசு மருத்துவமனை இணை இயக்குநர் பொறுப்பு வகிக்கும் கலாவிடம் இந்த விவகாரம் பற்றிக் கேட்டோம். நிர்வாகத்தில் நடைபெறும் விஷயத்தை நீங்கள் கேட்பது ஏன் என்று கேட்டவர், சம்பந்தப்பட்ட செவிலியர் புகார் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் உறுதியான குரலில்.
“வருகைப் பதிவேடுகளில் கோல்மால் நடப்பதால்தான், அரசு மருத்துவமனைகளில் பயோமெட்ரிக் கருவி அமைக்கப்பட்டது. அதிகாரத்தில் உள்ளவர்கள், அதைப் பழுதாக்கிக் கிடப்பில் போட்டுவிட்டனர். அதிகாரிகளும் அதைக் கண்டுகொள்ளத் தவறிவிட்டனர்” என்கின்றனர் கடலூர் மருத்துவமனை ஊழியர்கள்.
**-மின்னம்பலம் குழு**�,