அண்ணா பல்கலை மண்டலங்கள் : துணைவேந்தருக்கு நோட்டீஸ்!

Published On:

| By Balaji

{

அண்ணா பல்கலைக்கழக மண்டலங்களை திருச்சி, மதுரை, நெல்லை, கோவையில் அமைக்கக் கோரிய வழக்கில் உயர் கல்வித் துறை செயலர், அண்ணா பல்கலை துணைவேந்தர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி ஆகிய மண்டலங்களாக பிரிக்கப்பட்டன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 60க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த மண்டலங்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு சென்னை மண்டலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மண்டலங்களை திருச்சி, மதுரை, நெல்லை கோவையில் அமைக்கக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில், ஏற்கனவே செயல்பட்டு வந்த மண்டலங்களை அண்ணா பல்கலையுடன் இணைத்ததால் பாடம், தேர்வு முடிவுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பழைய முறையில் மாணவர்கள் எளிதாக அணுகவும், நேர, பண விரயங்கள் இல்லாமல் இருந்தது. அதனால், மாணவர்களின் நலன் கருதி தேர்வு முடிவுகளில் குழப்பம் ஏற்படாமல் இருக்க மண்டலங்களை மீண்டும் அமைக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை இன்று(ஏப்ரல் 1) விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இதுகுறித்து உயர்கல்வித் துறை செயலர், அண்ணா பல்கலை துணைவேந்தர் ஆகியோர் ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share