அண்ணா நூலகம் விவகாரத்தில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நூலகத்துக்குத் தேவையான புத்தகங்களை வாங்காமலும், உள்கட்டமைப்பு வசதிகளைப் பராமரிக்காமலும் தொடர்ந்து அதிமுக அரசு புறக்கணித்து வருகிறது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனோன்மணி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு விசாரித்தது. 29.10.2015 அன்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டதை அடுத்து, நீதிமன்ற உத்தரவுகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டு, நூலகம் பராமரிக்கப்படுகிறதா என நீதிமன்ற ஆணையாளர்கள் ஆய்வுசெய்து 8.1.2016 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் எதுவும் மேம்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அண்ணா நூலகம் தொடர்பான வழக்கு 15.4.2016 அன்று தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘உயர்நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், அண்ணா நூலகத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை செய்யப்படவில்லை’ என்று எடுத்துரைத்தார். அதைக்கேட்ட நீதிபதிகள், ‘தமிழக அரசின் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். நீதிமன்ற உத்தரவை அரசு அமல்படுத்தாதது ஏன்? அரசுக்கு விருப்பம் இருந்தால் 48 மணி நேரத்தில் எதையும் செய்துமுடிப்பீர்கள். இல்லாவிட்டால் எதுவும் செய்ய மாட்டீர்கள். உங்கள் பணி எங்களுக்கு வேதனை அளிக்கிறது. ஜுன் 30-ம் தேதிவரை இறுதிக்கெடு விதிக்கிறோம். அதற்குள் வசதிகளைச் செய்து கொடுக்காவிட்டால், நீதிமன்றமே அண்ணா நூலகத்தைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துப் பராமரிக்கத் தொடங்கும்’ என்று தமிழக அரசை உயர்நீதிமன்றம் மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளது. அண்ணா நூலகத்தைப் பொறுத்தவரை, சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதா அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருப்பது இது முதல்முறையல்ல; பலமுறை கண்டனம், கடும் கண்டனம், எச்சரிக்கை எனத் தெரிவித்திருந்த போதிலும், அவற்றைப் பற்றி அதிமுக அரசு சிறிதும் கவலைக்கொள்ளவோ, உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து உரிய நடவடிக்கை எடுக்கவோ இல்லை. இப்படி அண்ணா நூலக வழக்கில் மட்டுமல்ல, வேறு பல வழக்குகளிலும் அதிமுக அரசின்மீது தொடர்ந்து கண்டனக் கணைகள் பாய்ந்திருக்கின்றன. வெட்கக்கேடான திருப்பங்களை மிக அதிகமான வழக்குகளில் சந்தித்து வருவது இந்தியாவிலேயே ஜெயலலிதா அரசு மட்டும்தான் என்பது தமிழகத்துக்குப் பெருமை சேர்ப்பது ஆகாது; சிறுமையிலும் சிறுமை ஏற்படுத்துவது ஆகும். ஆனால், அதைப்பற்றி எல்லாம் அதிமுக அரசு சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை; நீதிமன்றக் கண்டனங்கள் யாவும் நெடுஞ்சுவர் மீது எய்யப்பட்ட அம்புகள் என எண்ணி, விலகி நின்று ஜெயலலிதா அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது!’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.�,
அண்ணா நூலகம்: வேடிக்கை பார்க்கும் அதிமுக அரசு – கருணாநிதி
Published On:
| By Balaji

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel