–
கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழக அணைகளை தூர்வாரி பராமரிக்க எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
பல்வேறு நீர்நிலைகள், அணைகளை தூர்வார உத்தரவிடக் கோரிய இரண்டு வழக்குகளை இன்று(மார்ச் 14) நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்தது. அப்போது, கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், அதனைப் பயன்படுத்தி அணைகளைத் தூர்வார வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.
தமிழகத்தில் எத்தனை அணைகள், முக்கிய கண்மாய்கள் உள்ளன. அவை கடைசியாக எப்போது தூர்வாரப்பட்டன என்றும் அணைகள் கட்டப்பட்டபோதும், தற்போதும் அவற்றின் கொள்ளளவு என்ன, எவ்வளவு தண்ணீர் கடலில் கலக்கிறது என்றும் கேள்வி எழுப்பினர்.
அரசுக்குச் செலவின்றி அணைகள் கண்மாய்களில் இருக்கும் மணல், களிமண்ணை எடுக்க வாய்ப்புள்ளதா, குடிமராமத்து மூலம் ஏதேனும் அணை தூர்வாரப்பட்டுள்ளதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை செயலர், தலைமைப் பொறியாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.�,