“மத்திய அரசில் அதிமுகவின் பங்கு நிச்சயம் இருக்கும்” என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தமிழகத்தில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அதிமுகவுடன் பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. கூட்டணி குறித்து இன்னும் ஒரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 18) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம், மத்தியில் புதிதாக உருவாக்கப்படவுள்ள மீன்வளத் துறைக்கு அதிமுக சார்பில் அமைச்சராக வாய்ப்பிருக்கிறதா என்னும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “கடந்த தேர்தலில் 37 இடங்களில் வென்று இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுகவை உருவாக்கினார் ஜெயலலிதா. அந்த சாதனை தொடரும். அதிமுகவின் பங்கும் மத்திய அரசில் நிச்சயமாக இருக்கும்” என்று பதிலளித்தார்.
கூட்டணி தொடர்பாக பேசிய ஜெயக்குமார், “எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம். கூட்டணி குறித்து எந்த ரகசியமும் கிடையாது, வெளிப்படையாக அறிவிக்கப்படும். அதிமுக தலைமையிலான கூட்டணி யானை பலம் கொண்ட கூட்டணி. யானை பலத்துடன் நாங்கள் இருப்பதால் பூனை பலம் கொண்டவர்கள் ஒன்றும் செய்ய முடியாது” என்று தெரிவித்தார்.
திமுகவை விமர்சித்துவரும் கமல்ஹாசன் அதிமுக பக்கம் வருவாரா என்ற கேள்விக்கு, “ஸ்டாலின் விளம்பரத்துக்கு வருவது போல் சட்டையைக் கிழித்து வந்ததை கமல்ஹாசன் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எங்களைப் பொறுத்தவரை திமுக, அமமுக இரண்டும்தான் எதிரிக் கட்சிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
�,