அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!

Published On:

| By Balaji

தமிழகச் சட்டமன்றத்தில் 2018-2019 ஆண்டுக்கான மானியக் கோரிக்கை விவாதங்கள் ஜூன் 28ஆம் தேதி முதல் துறை வாரியாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் கவன ஈர்ப்புத் தீர்மானம், மானியக் கோரிக்கை விவாதங்களில் காரசாரமான வாதங்களும், பதிலடிகளும் அரங்கேறும் அதே வேளையில் கலகலப்பான காட்சிகளுக்கும் பஞ்சமில்லை.

சட்டமன்றத்தில் என்னதான் நடக்கிறது என்பதை அறிய ஜூலை 16ஆம் தேதி சட்டமன்றத்தின் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து ஒருநாள் முழுவதும் அவை நிகழ்ச்சிகளைப் பார்த்தோம். எப்போதும் இல்லாத அளவுக்குப் பார்வையாளர்கள் மாடம் நிரம்பி வழிந்தது. அவையினுள் செல்லும்போது சட்டமன்றக் காவலர்கள் நம்மை முழுமையாகப் பரிசோதித்த பிறகே அனுமதித்தார்கள். கரும்பாசி நிறத்திலான சட்டை போட்டுக்கொண்டு வந்த ஒருவரை நிறுத்திய அவைக் காவலர்கள், “நீங்கள் கறுப்புச் சட்டை அணிந்து வந்திருக்கிறீர்கள். உங்களை உள்ளே விடமாட்டோம்” என்று கூறி திருப்பி அனுப்ப, அவரோ அறக்கப் பறக்க ஓடிச் சென்று தான் வைத்திருந்த வேறொரு சட்டையை அணிந்துகொண்டு உள்ளே வந்தார்.

சுகாதாரத் துறை, போக்குவரத்துத் துறை என இரண்டுக்கும் ஒரே நாளில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. மதியம் வாக்கில் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையின் கொள்கை விளக்கக் குறிப்புகளைத் தாக்கல் செய்து பேசினார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

மாலை சுமார் 5.25 மணியளவில் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை எண் 48ஐ வாசித்தார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். கொள்கை விளக்கக் குறிப்பு மீது கேள்விகளைக் கேட்க நெய்வேலி தொகுதி திமுக எம்.எல்.ஏ சபா.இராஜேந்திரனுக்கு அனுமதியளித்தார் சபாநாயகர்.

“1957 முதல் 2016 வரையில் போட்டியிட்டு 13 முறையும் வெற்றிபெற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களை வணங்கியும், போக்குவரத்து மானியக் கோரிக்கையில் பேசுவதற்கு வாய்ப்பளித்த திமுக தலைவர் தளபதியை வணங்கியும், திமுக இளைஞர் அணி செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதிக்கு வாழ்த்துகள் தெரிவித்தும் என்னுடைய கேள்விகளைத் தொடங்குகிறேன்” என்று தனது பேச்சைத் தொடங்கினார் சபா.இராஜேந்திரன்.

இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், “சேவை மனப்பான்மையோடு பணியாற்றும் போக்குவரத்துத் துறை மூலம் தமிழகம் முழுவதும் 21,744 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 1,37,408 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகிறது. தினசரி 87.22 லட்சம் கிலோமீட்டர் தூரம் வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் 1.73 கோடி பொதுமக்கள் பயனடைந்து வருகிறார்கள்” என்றார்.

உடனே திமுக எம்.எல்.ஏ சபா.ராஜேந்திரன் எழுந்து, “திமுக ஆட்சியில் நாளொன்றுக்கு 87.59 லட்சம் கிலோமீட்டர் தூரம் வரை பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த ஆட்சியில் 37,000 கிலோ மீட்டர் குறைந்துள்ளது. பேருந்துகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டன. 18.11.2011 மற்றும் 29.01.2018 ஆகிய தேதிகளில் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதால் பயணிகளின் எண்ணிக்கை 1.69 கோடியாகக் குறைந்தது. கலைஞரின் ஆட்சிக் காலத்தில் நாளொன்றுக்கு 2.05 கோடி பேர் வரை பயணம் செய்தனர். அதிமுக ஆட்சியில் 35 லட்சம் பயணிகளை இழந்துள்ளது போக்குவரத்துத் துறை. இதனால் 3.5 கோடி வருவாய் குறைந்து பெருத்த நட்டத்தைச் சந்தித்து வருகிறது” என்று குற்றம்சாட்டினார்.

உடனே அமைச்சர் செங்கோட்டையன், விஜயபாஸ்கரைப் பார்த்து ஏதோ சொல்லி துண்டு சீட்டு ஒன்றை எழுதி அமைச்சர் நிலோபர் கபில் மூலமாக விஜயபாஸ்கரிடம் அனுப்பினார். அதை வாங்கிப் பார்த்த அமைச்சர், “போக்குவரத்துத் துறை என்பது சேவை மனப்பான்மையுடன் இயங்குவது” என்று சபா.ராஜேந்திரனுக்குப் பதிலளித்தார்.

மீண்டும் பேசத்தொடங்கிய சபா.ராஜேந்திரன், “1967இல் அண்ணா முதல்வராகவும், கலைஞர் போக்குவரத்து அமைச்சராகவும் இருந்தபோது தனியார் உடைமை ஆகவிருந்த போக்குவரத்துத் துறையை அரசுடைமையாக்கி போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கினார்” என்று கூற விரைவில் முடிக்கச் சொல்லி சபாநாயகர் மணி அடித்தார்.

பதிலளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், “பிரிட்டிஷ் காலத்திலேயே 1944இல் இந்தியா முழுவதும் போக்குவரத்து அமைப்பு குறித்து ஆய்வு செய்து போக்குவரத்துத் துறையை தேசியமயமாக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் ஆணையிட்டதாகத் தெரிகிறது. அதனடிப்படையில் அப்போதைய சென்னை மாகாணம் 24.3.1947அன்று மாநில தலைநகர் சென்னையில் இயக்கப்படும் 239 தனியார் பேருந்துகளை தேசியமயமாக்க ஆணை வழங்கியது” என்று குறிப்பிட்டார்.

சபா.இராஜேந்திரன் விடாமல் பேசினார். “போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஓய்வுபெறும்போது வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடை கிடைக்காமல் வெறுங்கையோடு வீட்டுக்குச் செல்கிறார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் காசோலையை வங்கியில் போட்டால் பணம் இல்லை என்கிறார்கள்” என்று தொடர்ந்து பல கேள்விகளை எழுப்ப, ஒரு கணம் அமைச்சரே அசந்துபோனார்.

ஒரு கட்டத்தில் திமுக எம்.எல்.ஏ கேள்விக்கு கட்சி ரீதியான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினார் அமைச்சர் விஜயபாஸ்கர். “தமிழகத்தைப் பிச்சை பாத்திரமாக மாற்றியவர் கருணாநிதி. அட்சயப் பாத்திரமாக மாற்றியவர் புரட்சித் தலைவி அம்மா” என்று அவர் பேச திமுக எம்.எல்.ஏ.க்கள் கொதித்தெழுந்தனர்.

அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாம்பரம் ராஜா, மதுராந்தகம் புகழேந்தி, அம்பேத்கர் குமார், சபா.இராஜேந்திரன் ஆகியோர் கடுமையாகக் குரல் கொடுத்தார்கள். இந்த சத்தம் கேட்டு வெளியில் இருந்த ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, கொறடா சக்கரபாணி, சேகர்பாபு அனைவரும் அவைக்குள்ளே வந்து என்ன நடந்தது என்று கேட்டுக்கொண்டார்கள். உடனே திமுக கொறடா சக்கரபாணியை எழுந்து பேசச்சொன்னார் எ.வ. வேலு. ஆனால், சபாநாயகரோ அவருக்குப் பேச அனுமதி கொடுக்கவில்லை.

இதனால் மதுராந்தகம் புகழேந்தி, சபாநாயகர் இருக்கை அருகில் சென்று, “உங்கள் அம்மா சிறந்த நடிகை என்று பேசுங்கள். அதுவும் அவைக் குறிப்பில் இருக்கிறது. அவர் கொள்ளையடித்தவர் என்றும் பேசுங்கள்” என்று ஆக்ரோஷமாகக் கத்தினார். இதனால் ஆத்திரமடைந்த தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் சத்யா இருக்கையிலிருந்து எழுந்த அடிங்… என்று சத்தம் போட்டபடியே புகழேந்தியை நோக்கிப் பாய்ந்தார். உடனே சேகர்பாபு எழுந்து, “டேய் சத்யா, டேய் சத்யா… வாடா, வாடா இந்த பக்கம் வா… வா” என்று பேசியதும் அமைதியாக சீட்டில் போய் அமர்ந்தார் சத்யா.

அரை மணி நேரம் கழித்து அவைக்கு வந்த முதல்வர், “அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உங்களை எச்சரிகையாக இருக்கத்தான் பேசியுள்ளார். இங்கே இருந்தவர் (செந்தில் பாலாஜி) அங்கே வந்துள்ளார். அவர் அன்று சபையில் பேசியதைத்தான் அமைச்சர் பேசியுள்ளார். அது அவைக்குறிப்பிலும் இடம்பெற்றுள்ளது. அதில் தவறில்லை” என்று கூறினார். தொடர்ந்து செங்கோட்டையனும் ஜெயக்குமாரும் பதிலளித்தனர்.

திமுக கொறடா சக்கரபாணி எழுந்து, “அவைத் தலைவர் அவர்களே, மறைந்த தலைவர்களைப் பற்றி அவமரியாதையாகப் பெயர் சொல்லிப் பேசக் கூடாது என்று நீங்கள் ஏற்கனவே சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், அமைச்சர் மறைந்த எங்கள் தலைவரைப் பெயர் சொல்லிப் பேசுவது சரியா?” என்று கேள்வி எழுப்பினார்.

சபாநாயகர் தனபாலோ, “அமைச்சர் பேசியதில் தவறில்லை. அவர் அவைக்குறிப்பில் இருப்பதைதான் எடுத்துப் பேசுகிறார்” என்று கூற, “அப்படியென்றால் நாளைக்கு நாங்களும் அவைக்குறிப்பில் இருப்பதை எடுத்துப் பேசுகிறோம் நீங்கள் அனுமதிக்க வேண்டும்” என்று காட்டமாக எதிர்வினையாற்றினார் சக்கரபாணி.

உடனே முதல்வர் எழுந்து திமுகவினரை சமரசம் செய்வது போல, “உங்களிடம் வந்தவரிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்றுதான் சொல்கிறார் அமைச்சர்” என்று கூறினார். இதனால் இரு தரப்பிலும் மீண்டும் சலசலப்புகள் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ சபா.இராஜேந்திரன் தனது தொகுதி பிரச்சினைகளைப் பற்றி பேசினார். அதற்கு தொழில் துறை அமைச்சர் சம்பத் பதிலளித்தார்.

சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியில் சென்றதும் பல திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேறிவிடுகின்றனர். இதனால் அதிமுகவினர் பேச்சுக்குத் தகுந்த பதிலடி கொடுக்க முடிவதில்லை என்றும், மானியக் கோரிக்கையின்போது ஆக்கபூர்வமாக விவாதங்களைப் பார்க்க முடிவதில்லை என்றும் ஆதங்கப்படுகிறார்கள் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்தவர்கள்.

**சட்டமன்றத் துளிகள்**

* போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறிய அளவிலான கவர் ஒன்றைக் கையில் வைத்திருந்தார். அதை வாங்கிப் பார்த்த செங்கோட்டையன் சிரித்தபடியே முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்தார். அந்த கவரிலிருந்து புகைப்படங்களைப் பார்த்துச் சிரித்த முதல்வர், அதை செங்கோட்டையனிடமே மீண்டும் கொடுத்தார்.

அப்படி என்னதான் அந்த புகைப்படத்தில் இருக்கிறது என்று விசாரித்தால், “தற்போது திமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜெயலலிதா காலில் விழுந்த புகைப்படங்கள், கோயில்களில் அபிஷேகம் செய்த படங்கள் இருந்தன. அதனால்தான் போக்குவரத்து மானியக்கோரிக்கையான நாள் அன்றுகூட முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜி வரவில்லை” என்று கூறுகிறார்கள் அதிமுகவினர்.

* சட்டமன்ற நிகழ்ச்சிகளின்போது எம்.எல்.ஏ.க்கள் மீது பார்வையாளர்கள் எதையும் வீசிவிடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக அவைக்குள் செல்போன், பெல்ட், பரிசு, கைக்குட்டை, பேனா, பென்சில், பேப்பர் என எதற்கும் அனுமதிக்கப்படவில்லை.

**

மேலும் படிக்க

**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**

**[ வைகோ எம்.பி.யாக சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/07/17/51)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share