நடிகர் அஜித்குமாரை சந்திப்பதற்காக நான்கு ஆண்டுகளாக முயன்று வருவதாகவும் இருப்பினும் அவரைச் சந்திக்க முடியவில்லை என்றும் மயில்சாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஆர்.ஜே,பாலாஜி கதை, திரைக்கதை எழுதி நடித்துள்ள படம் எல்கேஜி. இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு நடிகர் மயில்சாமி பேசினார். படத்தை பற்றியும், அதில் தனது கதாபாத்திரத்தின் தன்மை பற்றியும் பேசியதுடன் தன்னை மிக பாதித்த சம்பவம் ஒன்றையும் விவரித்தார்.
“சென்னை நகரம் 2015ஆம் ஆண்டு வெள்ள நீரால் சூழ்ந்து பாதிப்புக்குள்ளான போது சாலிகிராமம், தசரதபுரம், விருகம்பாக்கம் பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டேன். அப்போது எனக்கு துணையாக 20 இளைஞர்கள் நிவாரண பணிகளில் எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி ஈடுபட்டனர். அப்போது நடிகர் அஜித் குமாருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்வதாக அவர்களுக்கு வாக்குறுதி கொடுத்தேன்.
இளைஞர்கள் வெள்ள நீரில் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் கடுமையாக உழைத்தனர். நான் கொடுத்த வாக்குறுதியை இன்று வரை அவர்களுக்கு நிறைவேற்றித் தர முடியவில்லை.
நானும் சினிமாவில் அனைவரும் அறிந்த காமெடி நடிகராக உள்ளேன். கடந்த நான்கு வருடங்களாக நடிகர்அஜித்தை சந்திக்க பல முறை முயன்றும் முடியவில்லை. இதுதான் இன்றைய சினிமா கதாநாயகர்களின் நிலைமை” என்றார் மயில்சாமி.
�,