அசல் கலைஞனுக்கு அஞ்சலி: திரண்டுவந்த திரையுலகம்!

Published On:

| By Balaji

இயக்குநர் மகேந்திரன் இன்று காலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். தற்போது அவரது உடல் சென்னை, பள்ளிக்கரணையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரைப்படத் துறையில் இயங்கிவந்த மகேந்திரனுக்கு திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திவருகின்றனர். இளையராஜா, ரஜினிகாந்த், பாரதிராஜா, மணிரத்னம், சுஹாசினி, மோகன், பாக்கியராஜ் உள்ளிட்ட பலரும் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், “இயக்குநர் மகேந்திரனுடன் எனக்கு சினிமாவைத் தாண்டிய நட்பு உள்ளது. எனக்குள் இன்னொரு ரஜினி இருப்பதை காட்டியவர் மகேந்திரன்தான். எதற்காகவும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காதவர், தமிழ் சினிமா உள்ளவரை இயக்குநர் மகேந்திரனுக்கென்று தனி இடம் இருக்கும்” என்றார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், “தமிழ் திரையுலக இயக்குநர்களில் ‘கதாநாயகராக’ விளங்கிய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல இயக்குநர் மகேந்திரன் தனது 79ஆவது வயதில் சென்னையில் மறைந்து விட்டார் என்ற சோகச்செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்குள்ளானேன். அவரது மறைவுக்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பத்திரிகையாசிரியர், திரைப்பட வசனகர்த்தா, இயக்குநர், நடிகர் என்று பன்முகத்திறமை கொண்ட அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், தமிழ் திரையுலகிற்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

வைரமுத்து தனது அறிக்கையில் “உங்களுக்குப் பிடித்த இயக்குநர் யார்’ என்று ஒரு புகழ்பெற்ற நடிகரைக் கேள்வி கேட்டார் ஒரு புகழ்பெற்ற இயக்குநர். நடிகர் பதில் சொன்னார் ‘மகேந்திரன்’ என்று. கேள்வி கேட்டவர் கே.பாலசந்தர்; பதில் சொன்னவர் ரஜினிகாந்த். ‘மகேந்திரன் பாணிதான் என்னுடைய பாணி’ என்று என்னிடம் மனம்விட்டுப் பேசும்போது சொல்லியிருக்கிறார் மணிரத்னம்.

இன்றைய இளம் இயக்குநர்களுள் பலருக்கு காட்சிப் படிமங்களைக் கற்றுத் தந்தவர் மகேந்திரன். இப்படி ஒரு தலைமுறையை தன் படைப்பாளுமையால் பாதித்தவர் மகேந்திரன். ‘வலிகளுக்கு மத்தியில் உள்ள சுகந்தான் வாழ்க்கை’ என்பது மகேந்திரன் படைப்புகளில் உள்ள கலைச் செய்தி. இன்னும் நீண்ட காலங்களுக்கு அவர் நினைக்கப்படுவார். இத்தனை பெரிய கலை இயக்குநரின் நதிமூலம் ஒரு பத்திரிகையாளர் என்பது பெருமைக்குரியது.” என்று குறிப்பிட்டுள்ளார். இறுதி சடங்கு மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share