ஃபோனி புயலால் பெரும் சேதத்துக்கு உள்ளாகியுள்ள ஒடிசாவுக்கு தமிழக அரசு ரூ.10 கோடி நிதியுதவி அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான ஃபோனி புயல் மே 3ஆம் தேதி காலை ஒடிசாவில் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு சுமார் 240 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன், பலமான மழையும் பெய்தது. இதனால் ஒடிசாவின் பல்வேறு பகுதிகள் கடுமையான சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. குறிப்பாகப் பூரி மாவட்டம் கடும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. இதுவரையில் ஃபோனி புயலுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 14 மாவட்டங்கள் இருளில் மூழ்கியுள்ளன. 35 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மரங்கள் முறிந்துள்ளன.
மொபைல், இணைய சேவைகள் முடங்கியுள்ளன. சீரமைப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஒடிசாவுக்கு பல்லாயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்புத் தொகுப்பு நிதியை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வீடு பெரும் சேதமடைந்தவர்களுக்கு 95,000 ரூபாயும், பகுதி சேதமடைந்தவர்களுக்கு 5,200 ரூபாயும், சிறிய அளவில் சேதமடைந்தவர்களுக்கு 3,200 ரூபாயும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும், “முழுமையாக வீடு இடிந்து விழுந்தவர்களுக்கு வீடமைப்புத் திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டிக்கொடுக்கப்படும். வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள், கால்நடை விலங்குகள், மீன்பிடி சாதனங்கள் சேத மதிப்பீடு கணக்கிடப்பட்டு நிதி அளிக்கப்படும். நிவாரணப் பணிகள் முடிந்தவுடன் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்படும். மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளான பூரி மாவட்ட மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி 50 கிலோ கூடுதல் அரிசி, ரூ.2,000 பணம் மற்றும் பாலித்தீன் கவர்கள் வழங்கப்படும். குர்தா மாவட்ட மக்களுக்கு ஒரு மாத அரிசி, 1000 ரூபாய் பணம் மற்றும் பாலித்தீன் கவர்கள் வழங்கப்படும்” என்று புவனேஸ்வரில் நடந்த கூட்டத்துக்குப் பிறகு ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஃபோனி புயலால் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருக்கிற ஒடிசா மாநிலத்துக்கு தமிழக அரசு நிவாரண நிதியை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 5) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஃபோனி புயல் புனித நகரமான பூரி உட்பட பல்வேறு நகரங்களுக்கு வார்த்தைகளில் விவரிக்க இயலாத அளவுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்திச் சென்றுவிட்டது. ஒடிசாவில் ஃபோனி புயலால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரிய அளவிலான இழப்பை எதிர்கொண்டுள்ள ஒடிசாவின் துயரத்தையும், அம்மாநிலத்தின் இழப்பையும் பகிர்ந்துகொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ஒடிசா மாநிலத்திற்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் வழங்கப்படும். ஒடிசா மாநிலத்திற்கு தேவைப்படும் மற்ற உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது” என்று கூறியுள்ளார்.�,”