மருத்துவமனைகளில் குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்தத் தொகுதியான கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கடந்த ஆகஸ்ட் 7 முதல் 14ம் தேதி வரை 63 குழந்தைகள் உயிரிழந்தன. அடுத்த இரு நாட்களிலே பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்தது. இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை 3 நாட்களில் 61 குழந்தைகள் மூளைக் காய்ச்சல், நிமோனியா உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் இறந்தன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பல்வேறு காரணங்களால் 296 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. மேலும், கோரக்பூரில் நேற்று (செப்டம்பர், 3) 13 குழந்தைகள் உயிரிழந்தன.
அதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்விக்கான கூடுதல் முதன்மை செயலாளர் அனிதா பாட்நகரை நீக்கம் செய்தும், குழந்தைகள் பலியான விவகாரத்தில் அரசு மருத்துவமனை முதல்வர் மிஸ்ரா உட்பட 6 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின் பேரில் லக்னோ நகரில் உள்ள ஹஜ்ரட்கஞ்ச் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 49 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் குழந்தைகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஃபரூக்காபாத் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததாலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறையாலும் 49 குழந்தைகள் ஜூலை 21 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை இறந்துள்ளன. மருத்துவர்கள் குழந்தைகளுக்கு எந்த ஆக்சிஜன் மாஸ்க்குகளையும் அணிவிக்கவில்லை எனக் குழந்தைகளின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஃபரூக்காபாத் மாவட்ட நீதிபதி ரவீந்திர குமார் உத்தரவிட்டுள்ளார். அலட்சியமாக செயல்பட்ட காரணத்துக்காக முதன்மை மருத்துவ அதிகாரி மற்றும் முதன்மை மருத்துவ கண்காணிப்பாளர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.�,