வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. Public Health issued warning
தமிழகத்தில் கோடை வெயில் இப்போதே வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. மார்ச் 7-ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்ககூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், வெயில் காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி,
“உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ள அதிகளவில் தண்ணீர் அருந்த வேண்டும். மேலும், இளநீர், மோர், எலுமிச்சை சாறு போன்ற பானங்களை எடுத்துகொள்ளலாம். ஓஆர்எஸ் கரைசல் பருக வேண்டும். ஆரஞ்சு, தர்பூசணி உள்ளிட்ட பழங்கள் சாப்பிடலாம்.
இறுக்கமான ஆடைகளை அணியாமல் பருத்தி ஆடைகளை தளர்வாக அணியலாம். வெளியே செல்லும் போது குடை, தொப்பி, கையுறை உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டும். கண்டிப்பாக காலணி அணிய வேண்டும்.

இணை நோயாளிகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், வெயிலில் பணியாற்றுபவர்கள் முன்னெச்செரிக்கையுடன் இருக்க வேண்டும். வசிப்பிடங்களில் காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
மது, புகை, தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். பழைய உணவுகள், அதிக புரதம் உள்ள உணவுகளை உண்ணக்கூடாது.
நிறுத்திய வாகனங்களில் குழந்தைகள், வளர்ப்பு பிராணிகளை விட்டுவிட்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.
ஸ்ட்ரோக் அல்லது மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டால் 108 எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.